திருப்பூர்,

திருப்பூர் அருகே உள்ள சாமளாபுரத்தில் அரது புதிதாக மதுக்கடை அமைத்தது. இதற்கு அந்தப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடினர்.

அதையடுத்து மதுக்கடையை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தெரிவித்து உள்ளது.

உச்சநீதி மன்ற உத்தரவை தொடர்ந்து நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக்கடைகளை அகற்றி, கிராமப்பகுதிகளில் நிறுவி வருகின்றனர் அதிகாரிகள்.  இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆனால், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, போலீசாரின் துணையோடு மதுக்கடைகளை தமிழக அரசு திறந்து வருகிறது.

இந்நிலையில் திருப்பூர் அருகே சாமளாபுரத்தில் தமிழக அரசு புதிதாக மதுபானக்கடையை நேற்று தொடங்கியது.

இந்த மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் காட்டுமிராண்டித் தனமாக தடியடி நடத்தினார்கள். பெண்கள் என்றும் பாராது அவர்கள்மீதும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடைபெற்றது.

திருப்பூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் என்பவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த  ஈஸ்வரி என்ற பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அப்போது படம் பிடித்த ஊடகவிய லாளர்களையும் விரட்டி அடித்தார்.

அடி தாங்க முடியாத அந்த பெண் நிலைகுலைந்தார். இந்த தடியடியில்  ஒருவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் ஏராளமானோர் போலீசாரின் தாக்குதலுக்கு ஆளாகினர்.

இந்த கொடுமையான செயல் குறித்த வீடியோ அனைத்து செய்தி நிறுவனங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சமூக வலைதளங்களிலும் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, அனைத்து கட்சி தலைவர்களும் தமிழக அரசுக்கும், டிஎஸ்பி பாண்டிய ராஜனுக்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில்  மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண் கன்னத்தில் அறைந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்னிலையில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி,  திருப்பூர் சாமளாபுரத்தில் சர்ச்சைக்குரிய மதுக்கடை அமைக்கப்படாது என்று தெரிவித்தார்.

மேலும், ஏடிஎஸ்பி தாக்கியது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, விசாரணையின் அடிப்படையில் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் தடியடியின் போது பெண்ணுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறினார்.

அதைத்தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இதற்கிடையில்,  திருப்பூர் சாமளாபுரம் டாஸ்மாக் கடையை மூட மாவட்ட கலெக்டர்  அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.