அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் ஆகிய காவல் நிலையங்களில் குற்றவழக்கில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை கொறடா கொண்டு பிடுங்கிய ஏ.எஸ்.பி. பலவீர் சிங் மீதான வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

பலவீர் சிங் தொடர்பாக வெளியான செய்தியை அடுத்து அவரை பணி இடைநீக்கம் செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின் அவரைக் காத்திருப்போர் பட்டியலில் வைத்தார்.

இதனைத் தொடர்ந்து முதன்மைச் செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ்.சை விசாரணை அதிகாரியாக நியமித்து ஐ.பி.எஸ். அதிகாரி பலவீர் சிங் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

விசாரணையை அடுத்து பலவீர் சிங் மீது க்ரைம் பிரிவு போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் பலவீர் சிங் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதை அடுத்து அந்த வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற அமுதா ஐ.ஏ.எஸ். பரிந்துரைத்ததை அடுத்து இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.