கலகலத்துப் போயிருக்கிறது தமிழ்நாடு ஐ.என்.டி.யூ.சி. சென்னை ராயப்பேட்டை பகுதியில் இருக்கும் இதன் தலைமையகத்தை சுற்றி கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
என்னதான் பிரச்சினை?
இந்திரா காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்க பிரிவு என்று அறியப்படும் ஐ.என்.டி.யூ.சி.யில் பலகாலமாகவே ஜி.காளன்தான் தலைவர்.
சமீபத்தில் ஓசூரில் இவர் நடத்திய ஐ.என்.டி.யூ.சி. மாநாட்டிற்கு  பல்வேறு முக்கிய தொழிற்சங்கத்தின் தலைவர்கள் வந்து பேசிச் சென்றார்கள்.
அதே மாநாட்டில்தான் ஒரு கோஷ்டி ரகளையிலும் ஈடுபட்டது.   இப்போது கே.எஸ். கோவிந்தராஜன் தலைமையில் புதிய அட்டாஹ் கமிட்டியை நியமித்திருக்கிறார் அகில இந்திய ஐ.என்.டி.யூ.சி. தலைவர் சஞ்சீவரெட்டி.
இதுதான் பதட்டத்துக்குக் காரணம்.
முதலில் ஜி.காளன் ஆதரவாளர்களின் தரப்பை அறிய அவர்களிடம்  பேசினோம். அவர்கள், “சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது, ஐ.என்.டி.யூ.சிக்கும் குறிப்பிட்ட எம்.எல்.ஏ. சீட் ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிடம் தெரிவித்தோம். இதை அகில இந்திய தலைமையும் வலியுறுத்தி இருந்தது. ஆனால் எங்களுக்கு உரிய மதிப்பை தமிழ்நாடு காங்கிரஸ் அளிக்கவில்லை.
இதனால் எங்கள் தலைவர் ஜி.காளன், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை சந்தித்து  எங்களது ஆதரவை தெரிவித்தார்.

ஜெயலலிதாவுடனான சந்திப்பில் காளனுடன் கோவிந்தராஜன் மற்றும் தேவராஜன்
ஜெயலலிதாவுடனான சந்திப்பில் காளனுடன் கோவிந்தராஜன் மற்றும் தேவராஜன்

தேர்தல் முடிந்து இரண்டரை மாதங்கள் முடிவடைந்துவிட்டன. இதுவரை அமைதியாக இருந்த ஐ.என்.டி.யூ.சி. அகில இந்திய தலைவர் சஞ்சீவரெட்டி, இப்போது திடுமென விழித்திருக்கிறார் போலிருக்கிறது.   “கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்பட்டிருக்கிறீர்கள்” என்று சொல்லி தலைவர் காளன் உள்ளிட்ட நிர்வாகிகளை நீக்குவதாக அறிவித்திருக்கிறார்.
இதற்குக் காரணம் கே.எஸ். கோவிந்தராஜன் என்பவர்தான். அவர்தான் தவறான தகவல்களைச் சொல்லி அகில இந்திய தலைவர் சஞ்சீவரெட்டியை தவறாக வழி நடத்துகிறார்” என்றார்கள்.
மேலும் அவர்கள், “ஓசூர் மாநாட்டில் கோவிந்தராஜ் உள்ளிட்டவர்கள் கலவரத்தில் ஈடுபட்டார்கள். ஆகவே, அந்த மாநாட்டிலேயே, “கே.எஸ். கோவிந்தராஜன் உள்ளிட்ட சிலர் செய்த குழப்பங்களால், தற்போது, தேர்தல் நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. ஆகவே   தற்போது பதவியிலுள்ள தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அடுத்த மாநாட்டில் தேர்தல் நடைபெறும் வரை பதவியில் நீடிக்கலாம்” என்று  தீர்மானம்  மிகப்பெரும்பான்மை ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.
உண்மை இப்படி இருக்க…   மாநாட்டில் குழப்பத்தை  ஏற்படுத்திய கே.எஸ்.கோவிந்தராஜனை புதிய அட்டாஹ் கமிட்டிக்கு தலைவராக ஐஎன்டியுசி தலைவர் சஞ்சீவரெட்டி,  நியமித்துள்ளதாக தகவல் வந்திருக்கிறது. மேலும் செயல் தலைவராக பி.கதிர்வேலை நியமித்திருப்பதாகவும் இதர பொறுப்புக்கும் நிர்வாகிகளை நியமித்திருப்பதாகவும் தகவல் வந்திருக்கிறது. ஆனால் இது குறித்து  தமிழக  ஐஎன்டியுசி-க்கு  எந்தவித தகவலும் வரவில்லை.
இதையடுத்துதான், “அட்டாஹ் கமிட்டி அமைத்ததாக சொல்வது   ஜனநாயக படுகொலை. சட்டத்தை மீறிய செயல்.  ஆகவே புதிய நிர்வாகிகள் பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம்.   தமிழ்நாடு ஐஎன்டியுசி வழக்கம்போ,  ஜனநாயக முறைப்படி இயங்கும்” என்று காளன் தெரிவித்தார்” என்றனர் காளன் ஆதரவாளர்கள்.
அடுத்து கோவிந்தராஜனின் ஆதரவாளர்களை சந்தித்தோம். அவர்கள்,  “கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்தார் காளன். அவர் எப்படி தலைவராக நீடிக்க முடியும். தவிர அகில இந்திய தலைமையே, கோவிந்தராஜ்தான் தலைவர் என்று சொல்லிவிட்டதே” என்றார்கள்.
அ.தி.மு.க. ஆதரவு குறித்து குறிப்பிடும் அகில இந்திய தலைமையின் அறிக்கை
அ.தி.மு.க. ஆதரவு குறித்து குறிப்பிடும் அகில இந்திய தலைமையின் அறிக்கை

இதற்கு காளன் ஆதரவாளர்கள், “கடந்த தேர்தலில் அ.தி.மு.கவுக்கு ஆதரவு அளித்ததை குறையாகச் சொல்கிறார்கள். ஐ.என்.டி.யூ.சி. என்பது தொழிலாளர்களுக்கான தனி அமைப்பு. இதில் காங்கிரஸ் ஆதரவு மனப்பான்மை உள்ளவர்கள் மட்டுமல்ல.. பிற கட்சி ஆதரவாளர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.  ஆகவே அனைத்துத் தொழிலாளர் நலனை முன்னிட்டு சில நடவடிக்கைகளை தலைமை எடுக்கத்தான் செய்யும். இது எல்லா தொழிற்சங்கங்களிலும் நடப்பதுதான்” என்றவர்கள் அடுத்து சொன்னதுதான் அதிர்ச்சிகரமான செய்தி:
“அ.தி.மு.க.வுக்கு ஆதரவளித்தது தவறு என்று ஒரு வாதத்துக்காக வைத்துக்கொள்வோம். காளனுடன் சென்று ஜெயலலிதாவை சந்தித்தவர்களில் ஒருவர், இப்போது தலைவராக சொல்லப்படுகிறாரே.. அந்த கே.எஸ்.கோவிந்தராஜனும்தான்!  அந்த சந்திப்பில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட இன்னொருவரான தேவராஜன் பொருளாளராம்!
இதுதான் அவர்களுக்கு  திருடனுக்கு தேள் கொட்டியதுபோல் ஆகிவிட்டது.  அகில இந்திய ஐ.என்.டி.யூ.சி. தலைவர் சஞ்சீவரெட்டி தனது அறிக்கையில், “அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தது தவறு” என்பதாக குறிப்பிடுகிறார். ஆனால் அட்டாஹ் கமிட்டி தலைவரான கோவிந்தராஜன் தனது அறிக்கையில் அந்த பகுதியே இல்லை.
அதுமட்டுமல்ல.. அட்டாஹ் கமிட்டியில் உள்ள கதிர்வேள், த.மா.கா. காரர். தேவராஜன் அ.தி.முக. ஆதரவாளர். தவிர அந்த கமிட்டியில் உள்ள சிலரே, காளனுடன் சேர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்றும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அதுமட்டுமா..      இவர்களில் கோவிந்தராஜ் உட்பட சிலர், சந்தா பணமே செலுத்தவில்லை பல வருடமாக!” என்றவர்கள்,
அ.தி.முக. ஆதரவு குறித்த விஷயம் இல்லாத, அட்டாஹ் கமிட்டி தலைவர் கோவிந்தரானின் அறிக்கை
அ.தி.முக. ஆதரவு குறித்த விஷயம் இல்லாத, அட்டாஹ் கமிட்டி தலைவர் கோவிந்தரானின் அறிக்கை

“அதே நேரம், தேர்தலில் ஐ.என்.டி.யூ.சிக்கு  உரிய பிரதிநிதித்துவம் தரவில்லை என்பதால்தான் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்தார் எங்கள் தலைவர் காளன்   அது,  அந்தத் தேர்தலோடு அது முடிந்துவிட்டது. சமீபத்தில் ஓசூரில் நடந்த பிரம்மாண்டமான மாநாட்டில்கூட காந்தி, காமராஜர், சோனியாகாந்தி, வாழப்பாடி ராமமூர்த்தி, ராகுல்  ஆகோயரது படங்களைத்தான் மேடையில் வைத்திருந்தோம். இதிலிருந்தே தெரியவில்லையா.. எங்களது உணர்வுகள்..”  என்று கேட்டனர் காளன் ஆதரவாளர்கள்.
மீண்டும் கோவிந்தராஜ் ஆதரவாளர்களை அணுகி , “அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை காளன் சந்தித்தபோது, கோவிந்தராஜூம்தானே இருந்தார். பிறகு எப்படி அதை குறையாக சொல்கிறீர்கள்” என்று கேட்டோம்.
அசட்டுச்சிரிப்பே பதிலாக வந்தது.

  • கா.சந்தோஷ்