ஒரு மாதத்துக்கும் மேலாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.  இந்த நிலையில், சித்த மருத்துவர்கள் பலரும், “சித்தவைத்தியத்தில் சிகிச்சை பெற்றால் முதல்வர் விரைவில் நலம் பெறுவார். அவருக்கு சிகிச்சை அளிக்க நாங்கள் தயார்” என்று சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
அப்படி பதிவிட்டிருந்த சித்த மருத்துவர் கா. திருத்தணிகாசலத்தை தொடர்புகொண்டு பேசினோம்.  

ஜெயலலிதா
ஜெயலலிதா

முதல்வருக்கு சித்த வைத்திய சிகிச்சை அளிக்க தயார் என்று சொல்லியிருக்கிறீர்கள். அவருக்கு தற்போது எந்த மாதிரியான சித்தவைத்திய சிகிச்சை தேவை என்று நினைக்கிறீர்கள்?
முதல்வர் அம்மா அவர்களின், நோய் குறித்த முழுமையான அறிக்கை நமக்கு கிடைக்கவில்லை. அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கைகளில் இருந்து நாங்கள் தெரிந்துகொண்ட விசயங்களைச் சொல்கிறோம்.
முதல்வரம்மா அவர்களின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. கையழுத்து போட முடியாத நிலையில் இருக்கிறார். அதே நேரம் தன்னைச் சுற்றி நடப்பதை அறிந்துகொள்ளும் நிலையில் இருக்கிறார் என்று கடைசியாக வந்த  அப்பல்லோ அறிக்கையில் சொல்கிறார்கள். 
இதற்கு  நவீன மருத்துவத்தில் பெரிய அளவில் நிவாரணம் தரும்படியான சிகிச்சை ஏதும் கிடையாது. ஆனால் சித்த மருத்துவத்தில், நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய வாத நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை உண்டு. ஆகவே சித்த வைத்திய சிகிச்சையால் அம்மாவின் செயல் திறனைக் கூட்ட முடியும்.
நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், இதய தசை நார் பாதிக்கப்பட்டிருந்தாலும் மூலிகை சிகிச்சை மூலமாக நிவாரணம் கிடைக்கும்.  இந்த சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏதும் இருக்காது.
அப்படி முதல்வர், சித்த வைத்திய சிகிச்சையை ஏற்றால், எத்தனை நாட்களில் நிவாரணம் கிடைக்கும்?
அம்மா அவர்களின் உடல் நலனை நேரடியாக அறிந்தே அதை சொல்ல முடியும். அதே நேரம், இந்த மருந்துகளை அம்மாவுக்கு அளித்தால், நிவாரணம் அடைவதை பத்தே நாட்களில் உணரமுடியும்.
உங்கள் கோரிக்கையை அரசு ஒப்புக்கொள்ளுமா?
இதுவரை இருந்த அரசுகளை விட, புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய அரசு, சித்த வைத்தியத்துக்கு உரிய முக்கியத்துவத்தை அளித்து வருகிறது. குறிப்பாக  இந்தியாவிலேயே பொது சுகாதார துறையில் சித்த வைத்தியத்துக்கு உரிய அங்கீகாரம் அளித்திருக்கிறார் அம்மா.
திருத்தணிகாசலம்
திருத்தணிகாசலம்

சிக்கன் குனியா, டெங்கு போன்ற நோய்ப் பரவலை தடுப்பதற்கு உள்ளாட்சிகளின் மூலமாகவும் அரசு மருத்துவமனைகள் மூலமாகவும் நிலவேம்பு குடிநீரை எல்லா மக்களுக்கும் வழங்கியதை சித்த வைத்தியர்கள் நன்றியோடு பார்க்கிறோம். ஆகவே சித்த வைத்தியத்தின் மீது அம்மா அவர்களுக்கு முழு நம்பிக்கை உண்டு என்பதை நாங்கள் அறிவோம்.
விளம்பரத்துக்காக இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறீர்களா?
இதில் விளம்பரம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. அம்மா, எங்கள் முதல்வர். நாங்கள் உலகம் முழுதும் உள்ள தமிழர்கள் முதல்வர் அம்மா அவர்கள் முழு நலம் பெற பிரார்த்தனை செய்து வருகிறோம். அவர் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர்கள் நாங்கள். ஆகவேதான் இந்த அறிவிப்பு.
இன்னொரு காரணம்.. முதல்வரம்மா போல பாதிக்கப்பட்டவர்களை நாங்கள் விரைவில் குணமாக்கியிருக்கிறோம்.  இவர் இன்னும் குணமாகவில்லையே என்ற ஆதங்கம் ஒரு காரணம்.
முதல்வரம்மா விரைவில் முழு குணமடைந்துநாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆதங்கத்தால் இந்த கோரிக்கை வைக்கிறோம்.