கோவை

கோவை தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் நடராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

கோவை  மக்களவை தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக அக்கட்சியின் மூத்த தலைவர் பி ஆர் நடராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார்.  இவர் கோவை தொகுதியில் கடந்த 2009 ஆம் வருட மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரபுவை 35000 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.   கடந்த 2014 ஆம் வருட தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாகராஜனிடம் தோற்று ஐந்தாம் இடத்தில் வந்தார்.

நடராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டியில் நாகராஜன், “ஒரு காலத்தில் மக்கள் கோவை மற்றும் திருப்பூர் சென்றால் எப்படியும் பிழைக்கலாம் என கூறுவார்கள். ஆனால் நிலைமை தற்போது தலைகீழாக மாறி உள்ளது.  இங்கு பொறியியல் பட்டம் பெற்றவர்கள் வேறு இடங்களுக்கு வேலை தேடி செல்கின்றனர்.   இந்தப் பகுதியில் மத்திய அரசு துறைகளில் 11.4 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன.  அவைகளை நிரப்ப நான் போராடுவேன்.

இங்குள்ள மற்றொரு விவகாரம் மின் கோபுரங்கள் அமைக்க நிலம் கையகப்படுத்துதல் ஆகும்.   அரசு செலவில் அதிகாரிகள் இது குறித்து அறிய வெளிநாடுகள் செல்கின்றனர்.   ஆனால் அங்கிருந்து இது குறித்த தொழில்நுட்பம் எதையும் தெரிந்துக் கொள்ளவில்லை.  அரசுக்காக விவசாயிகள் நிலம் இழக்கவேண்டுமா என நான் கேட்டால் என்னை முன்னேற்றத்துக்கு எதிரி என சொல்வார்கள்.  விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப் பட்டு  நெடுஞ்சாலைகள், எண்ணெய் குழாய்கள் உள்ளிட்ட பலவற்றையும் அர்சு அமைக்காமல் வேறு தொழில் நுட்பம் ஏன்பயன்படுத்தக் கூடாது என்பதில் நான் கவனம் செலுத்துவேன்.

கோயம்புத்தூரில் போக்குவரத்து மிகவும் மோசமாக உள்ளது.  எனவே நான் மெட்ரோ ரெயில் அமைக்க யோசனை கூறியதில் சர்வே நடத்தப்பட்டது.   இது குறித்து பலமுறை நான் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.  ஆனால் பயனில்லை.   மெட்ரோ ரெயில் உடனடியாக அமைக்க பாடுபடுவேன்.  அடுத்தது. பாதி கட்டப்பட்டு நிறுத்தப்பட்ட மேம்பாலங்களை முழுமையாக கட்டி முடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க ஆவன செய்வேன்.  மூன்றாவதாக கோவை குடிநீர் பஞ்சத்துக்கு நிரந்தர தீர்வு காண  நடவடிக்கை எடுப்பேன்.

கோவைக்கு முக்கியமானது மேற்கு தொடர்ச்சி மலை.   அந்த மலையின் பல பகுதிகள் தன்னை சாமியார் என சொல்லிக் கொள்பவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.  இதனால் பல குடும்பங்கள் வாழ்வாதாரத்டை இழந்துள்ளனர்.   ஆகவே இந்த சாமியாரை விரட்டி ஆக்கிரமிப்புக்களை மீட்க என்னால் முடிந்ததை நான் நிச்சயம் செய்வேன்.

சென்ற முறை அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து வென்ற நான் தற்போது திமுக கூட்டணியில் இருக்கிறேன்.   தற்போது அதிமுக மிகவும் பலவீனமாக உள்ளது.  தனது தலைவியின் தொகுதியில் இரட்டை இலை சின்னம் இருந்தும் அதிமுக வால் வெற்றி பெற முடியவில்லை.  அது மட்டுமின்றி தோல்வி பயத்தால் அதிமுக உள்ளாட்சி தேர்தல்களை நடத்தாமல் உள்ளது.  ஆகவே எனது வெற்றி இங்கு உறுதி செய்யபட்டுள்ளது.” என பதிலளித்துள்ளார்.