பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து 13500 கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றிய வழக்கில் தேடப்பட்டு வரும் மெகுல் சோக்சிக்கு எதிராக இன்டர்போல் அமைப்பு வெளியிட்ட ரெட் கார்னர் நோட்டீசை அந்த அமைப்பு வாபஸ் பெறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் மெகுல் சோக்சி-யை கைது செய்வதில் இந்திய அரசுக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
போலி ஆவணங்கள் மூலம் இந்திய வங்கிகளில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வாங்கிய வைர வியாபாரி மெகுல் சோக்சி கடந்த 2018 ம் ஆண்டு இந்தியாவில் இருந்து வெளியேறி ஆண்டிகுவா நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.
ஆண்டிகுவாவில் இருக்கும் மெகுல் சோக்சி-யை சர்வதேச காவல்துறை (இன்டர்போல் அமைப்பு) உதவியை இந்தியா நாடியதை அடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது இன்டர்போல்.
2021ம் ஆண்டு மே மாதம் மெகுல் சோக்சி டொமினிக்கன் தீவுகளில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் இந்திய உளவுத் துறை அதிகாரிகள் தன்னை ஆண்டிகுவாவில் இருந்து கடத்தி வந்ததாக கூறிய மெகுல் சோக்சி இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார்.
தன்னை இந்தியாவுக்கு அனுப்பினால் அங்கு நியாயமான விசாரணை நடத்தாமல் தன்னை கொன்றுவிடுவார்கள் என்று கூறினார்.
இந்த நிலையில், விதிகளுக்கு முரணாக ஆண்டிகுவா காவல்துறையினர் உதவியுடன் மெகுல் சோக்சி-யை சட்டவிரோதமாக டொமினிக்கன் தீவுக்கு இந்திய அதிகாரிகள் கடத்தி வந்ததற்கான நம்பத் தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக சர்வதேச காவல்துறை கூறியுள்ளது.
இதனையடுத்து மெகுல் சோக்சி குறித்து வெளியான ரெட் கார்னர் நோட்டீசை இன்டர்போல் அமைப்பு திரும்பப் பெரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இன்டர்போலின் இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அதேவேளையில், இந்த அறிவிப்பு மெகுல் சோக்சி ஆண்டிகுவா மட்டுமன்றி தான் விரும்பிய எந்த ஒரு நாட்டுக்கும் சென்று தஞ்சமடைய வழி ஏற்படுத்தி தந்திருப்பதாகக் கூறப்படுகிறது.