சென்னை:

கிராமப்பகுதிகளில் இன்டர்நெட் வசதிக்காக ஃபைபர் கேபிள் பதிப்பது தொடர்பான டெண்டரில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறி  தமிழகஅரசுமீது திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. திமுக சார்பில் ஆர்எஸ் பாரதி மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் உதயகுமார் மீது குற்றம் சுமத்தி உள்ளார்.

‘மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்தின் கீழ் தமிழகத்திலுள்ள 12,524 ஊராட்சிகளிலும் இன்டர்நெட் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1,950 கோடி ரூபாய் மதிப்பில்டெண்டர் கோரப்பட்டது. அதில் பெரும்பாலான நிறுவனங்கள் கலந்துகொண்ட போதிலும், இரண்டு நிறுவனங்களுக்கு மட்டும் டெண்டர் வழங்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக முறைகேடு நடைபெற்றுள்ளதாக திமுக குற்றம் சாட்டியது.

இந்த நிலையில் திமுக சார்பில்,  ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழகஅரசு மீது வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், “தமிழகம் முழுவதும் 12, 524 ஊராட்சிகளில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்கும் டெண்டரை முதல்வர் மற்றும் வருவாய்த் துறை அமைச்சரின் விருப்பப்படி அளிக்குமாறு தகவல் தொழில் நுட்பச் செயலாளர் சந்தோஷ் பாபு, டான்ஃபினெட் நிர்வாக இயக்குனர் எம்.எஸ். சண்முகம் ஆகியோருக்கு அழுத்தம் தரப்பட்டது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த இரண்டு அதிகாரிகளும் அதற்கு உடன்படவில்லை என்பதால், அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும், “தமிழகமே கொரோனா பீதியில் இருந்தபோது, தலைமைச் செயலகத்தின் அதிகார மட்டங்கள் 2019 டிசம்பர் 5, 6 ஆம் தேதிகளில் வழங்கப்பட்ட டெண்டர்களில் மாற்றங்களைச் செய்வதில் மும்முரமாக இருந்தன.

இந்த முறைகேடு தொடர்பாக மே 11ஆம் தேதி நான் அளித்த புகாரின் பேரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும். இதுபற்றி விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்” என்று கூறி உள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.