கோவை: கோவை ஒண்டிப்புதூரில் சுமார் 20.72 ஏக்கரில் அமைக்கப்பட உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் திட்டப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் டெண்டர் கோரி உள்ளது. இந்த மைதானம், பொது-தனியார் பங்களிப்பு முறையில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில், சுமார் 30 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டிகளை காணும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூர் நகரம் தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்ததாக வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு முக்கிய நகரமாக திகழ்ந்து வருகிறது. கோயம்புத்தூரில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனால் அறிவிப்பாக மட்டுமே நின்றுவிட்டது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் இந்த அறிவிப்பு செயல்படுத்தாவிட்டால் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கட்சி நிர்வாகிகள் கூறினர்.
இந்த நிலையில், தற்போது தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகமான டிட்கோ கோயம்புத்தூரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு ஆர்வமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பம் செய்யலாம் என ஒப்பந்த புள்ளி கோரியுள்ளது.
கோயம்புத்தூரில் ஒண்டிப்புதூர் அருகே 20.72 ஏக்கர் நிலத்தில் உலக தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானம் அமைக்க அரசு தனியார் கூட்டு முயற்சியில் ஒப்பந்தம் கோரியுள்ளது. விருப்பமுள்ள நிறுவனங்கள் நவம்பர் 24ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
உலக தரத்தில் கட்டப்பட உள்ள இந்த கிரிக்கெட் மைதானம், சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தை விட நவீன வசதிகளுடன் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கடந்த மக்களவைத் தேர்தல் வாக்குறுதியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், தற்போது சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இந்த ஸ்டேடியம் அமைக்க நான்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்ட நிலையில், இறுதியாக ஒண்டிப்புதூர் தேர்வு செய்யப்பட்டது. அந்த பகுதியில் 20. 72 ஏக்கரில் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டது . இதையடுத்து, கிரிக்கெட் மைதானத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. கோவையில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதான கட்டுமான பணிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையமும் தடையில்லா சான்று வழங்கி இருக்கிறது .
இந்த சூழலில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் திட்ட பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் டெண்டர் கோரி இருக்கிறது. அரசு தனியார் பங்களிப்பு முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். 20.72 ஏக்கர் பரப்பளவில் மைதானமும் 10 ஏக்கரில் வணிக வளாகம் வளாகமும் அமைக்கப்படுகிறது.
இந்த மைதானம் பகல் மற்றும் இரவு போட்டிகள் நடத்தப்படும் வகையிலும் , பல்வேறு பெரிய இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் வகையிலும் அமைக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
சுமார் 30 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டிகளை ரசிக்கக்கூடிய வகையில் இருக்கைகள் இருக்கும் என சொல்லப்படுகிறது. 500 கோடி ரூபாய் முதலீட்டில் 2027 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த மைதானம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.