லண்டன்:

2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முதன்மை நிர்வாகி டேவி ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் விளையாட்டில் 1900ம் ஆண்டு கிரிக்கெட் இடம்பெற்றிருந்தது. அதன் பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறவில்லை. ‘‘தற்போது 2024ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இடம்பெற செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்று ஐசிசி முதன்மை நிர்வாக டேவி ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘இது தொடர்பாக வரும் ஜூலை மாதத்திற்குள் முடிவெடுத்து, செப்டம்பர் மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டும். சர்வதேச ஒலிம்பிக் குழு தான் இந்த முடிவை எடுக்க வேண்டும்’’ என்று ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை ப்ரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலும், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் நடத்த கடும் போட்டி நடந்து வருகிறது. இதில் ஏலத்தில் எந்த நகரம் வெற்றி பெறுகிறதோ அந்த நாட்டில் தான் 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடக்கும்.

2020ம் ஆண்டில் ஜப்பான் டோக்கியோவில் நடக்கிறது. போட்டிகளை நடத்தும் நாடுகள் தங்களது தரப்பில் சில விளையாட்டு போட்டிகளை ஒலிம்பிக்கில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த வகையில் டோக்கியோவில் பேஸ் பால், சாப்ட்பால் ஆகிய போட்டிகள் மீண்டும் இணைக்கப்படவுள்ளது.

‘‘ஏலத்தில் எந்த நகரம் வெற்றி பெற போகிறது என்பது ஒரு பிரச்னை இல்லை. இரு நகரங்களும் கிரிக்கெட்டுக்கு வாய்ப்பு அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அமெரிக்காவை விட ப்ரான்சில் உள்ள கிரிக்கெட் பிட்ச்களுக்கு சற்று கூடுதல் செலவு செய்ய வேண்டும்.

ஆனால் இது சாத்தியப்படும் என்று தோன்றவில்லை. ஐசிசி.யின் பெரும்பாலான உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதனால் இது தான் சரியான நேரம் என்று தோன்றுகிறது. உலகம் முழுவதும் கிரிக்கெட்டிற்கு அங்கிகாரம் கிடைக்கச் செய்யும் வகையில் இந்த முடிவை எடுக்க நேரம் வந்துவிட்டது. 20:20 வகை கிரிக்கெட் போட்டிகள் ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறலாம்’’ என்றார் ரிச்சர்ட்சன்.

மேலும், ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெற்றால், அந்த காலக்கட்டத்தில் நடக்க இருக்கும் இதர சர்வதே கிரிக்கெட் போட்டிகள் பாதிக்கும் என்ற கவலை உள்ளது. பரபரப்பான கிரிக்கெட் ஆண்டில் போட்டிகளை மாற்றி அமைப்பது பெரும் தலைவலியாக இருக்கும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

அதனால் எந்தெந்த அணிகள் இதில் கலந்துகொள்ளும் என்பது பெரும் சிக்கலாய் இருக்கும். இது போன்ற நிலை தான் கொல்ப் போட்டிக்கு ஏற்பட்டது. 1904ம் ஆண்டுக்கு பின் கடந்த ஆண்டு ரியோவில் நடந்த ஒலிம்பிக்கில் கொல்ப் சேர்க்கப்பட்டது. ஆனால் முன்னணி வீரர்கள் யாரும் இதில் கலந்துகொள்ளவில்லை.

‘‘ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதால் கிரிக்கெட் அணிகளுக்கு அதிக பயன் கிடைக்கப்பபோவது கிடையாது. ஆனால், இந்த விளையாட்டு ஒலிம்பிக் விளையாட்டு என்றால், அதற்கு அரசு நிதியுதவி பெறுவது எளிதாக இருக்கும்’’ என்று ரிச்சர்ட்சன் தெரிவித்தார்.