சென்னை: எம்பிசி இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு கோரி  தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழகத்தில் ஜாதி வாரியாக இடஒதுக்கீடு உள்ள நிலையில், அது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில்,  அரசு வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதஇடஒதுக்கீடு வழங்க கோரி பாமக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, மேலும் பல சாதியினரும், தங்களுக்கும் தனி இடஒதுக்கீடு வேண்டும் என போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
இதையடுத்து நீதிபதி குலசேகரன் தலைமையில் ஜாதி வாரியான இடஒதுக்கீடு குறித்துஆணையம் அமைத்து தமிழகஅரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜா என்பவர் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், எம்பிசி கோட்டா எனப்படும்  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில்  சாதி ரீதியில் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும்,   தமிழகத்தில் சாதிவாரியான புள்ளிவிவரங்களை 6 மாதங்களில் திரட்டி அறிக்கை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டடுள்ளது.  ஆனால், 1983ம் ஆண்டு சாதி ரீதியாக கணக்கெடுப்பு நடத்த மூன்று ஆண்டுகள் தேவைப்பட்ட நிலையில், தற்போது ஆறு மாதங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என கூறப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசு நியமித்த ஆணையம் பரிந்துரைகளை வழங்காத நிலையில், முன் கூட்டியே வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் நீதிபதி குலசேகரன் ஆணையம் அளித்த அறிக்கையை ஏற்று அரசு உத்தரவு பிறப்பித்தால், அதனை எதிர்த்து வழக்கு தொடரலாம் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.