தருமபுரி:
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக டாக்டர் செந்தில்குமார் நிறுத்தப்பட்டு உள்ளார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி வேட்பாளராக பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் களத்தில் உள்ளார்.
நேற்று முதல் தருமபுரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமாரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அத்துடன் காலியாக உள்ள பாப்பிரெட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மணிக்கும் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், நாடும் நமதே நாற்பதும் நமதே என்று முழக்கத்துடன் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஸ்டாலின் தெரிவித்தார். நேற்று இரவு தருமபுரியில் ஓய்வு எடுத்த ஸ்டாலின் இன்று அதிகாலை நடைபயணம் மேற்கொண்டார்.
அப்போது சாலையோரம் வியாபாரம் செய்து வரும் வியாபரிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்களின் வாழ்வாதாரம் குறித்து விசாரித்த ஸ்டாலின், திமுகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
ஸ்டாலின் காலை நடைபயணம் செய்வதை கேள்விபட்ட அப்பகுதி மக்கள் ஏராளமானோர் சாலைகளில் குவிந்தனர். அவர்களிடம் சிரித்த முகத்துடன் பேசிக்கொண்டே நடைபயணம் மேற்கொண்ட ஸ்டாலின் பல இடங்களில் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.
அந்த பகுதியில் உள்ள ஆவின் ஜங்ஷனில் ஏராளமான பொதுமக்கள் கூடியதால், அவர்களிடம் இணைந்து குழு படமும் எடுத்துக்கொண்டார். ஸ்டாலினின் எளிய முறையிலான நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.