சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 17ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தீபாவளிக்கு பின் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்றும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்றும் அதே பகுதியில் நிலவி வருவதாகவும், குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டவ மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்னாசி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என அறிவித்திருந்தது.
மேலும், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பூர், கரூர்,திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, கடலூர், சிவகங்கை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
இதைத்தொடர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 17ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நவம்பர் 17ம் தேதிக்கு பிறகு தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளது.
மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் தீபாவளிக்கு பின் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது.