தமிழ்நாட்டில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை அனுமதிக்க வேண்டாம் தமிழக அரசுக்கு உளவுத்துறை பரிந்துரை செய்துள்ளது.

பெண்களை தீவிரவாதிகளாக மாற்ற கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாகக் காட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்துள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ மே 5ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் இதன் டிரெய்லர் வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளானது.

கேரளாவில் ஏறத்தாழ 32,000 பெண்கள் இஸ்லாமிய மதத்திற்கு கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டதாகவும், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவின் செயல்பாடு உச்சத்தில் இருந்தபோது பலர் சிரியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் இந்தப் படத்தில் கூறப்பட்டுள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்தப் படத்தை சங்பரிவாரின் பிரச்சாரப் படம் என்று விமர்சித்திருந்தார்.

32000 கேரள பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு சிரிய தீவிரவாதிகளாக சென்றதை யாராவது நிரூபித்தால் 1 கோடி ரூபாய் பரிசு தருகிறேன் என்று காங்கிரஸ் எம்.பி. சஷிதரூர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் “வெறுக்கத்தக்க பேச்சுக்கள் உள்ள போதும் இந்தப் படம் தணிக்கை சான்று பெற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

திரைப்படத்தை வெளியிட தடை செய்ய விரும்பினால் மனுதாரர் அதன் தணிக்கை சான்றிதழ் மீது பொருத்தமான மன்றம் மூலம் சவால் செய்ய வேண்டும்” என்று கூறியது.

மேலும், “இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை” என்று கூறி படத்திற்கு தடை விதிக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது.

இந்தப் படத்தின் டிரெய்லர் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து “32000 பெண்கள் மதமாற்றம்” என்ற வசனத்தை மியூட் செய்திருக்கிறது. தவிர, இந்தப் படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென் மூன்று பெண்களுக்கு நிகழ்ந்த உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்றும் விளக்கமளித்துள்ளார்.

இந்த நிலையில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு இருக்கும் நிலையில், தமிழகத்தில் வெளியிட்டால் எதிர்ப்புகள் உருவாகும் என உளவுத் துறை தமிழக அஅரசை எச்சரித்துள்ளது.