சென்னை: தமிழகத்தில் ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹489 கோடியில் 48 புதிய திட்டங்கள் – திருக்கோவிலூரில் ₹130 கோடி செலவில் அணைக்கட்டு மறுகட்டுமானம்  என பல பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.

தமிழக அரசு, நீர்வள மேலாண்மை மற்றும் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டு திட்டத்தின் (Integrated Water Resources Management – IWRM) கீழ்  ரூ. 489 கோடி மதிப்பீட்டில் 48 புதிய பணிகளை மேற்கொள்வதற்கான நிர்வாக ஒப்புதலை வழங்கியுள்ளது.

ஏற்கனவே தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி,  கடலரிப்பு தடுப்பு திட்டம், நீர்நிலைகள் புனரமைப்பு திட்டம் போன்றவை, ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டங்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துவதோடு, வெள்ளம், கடலரிப்பு, நிலத்தடி நீர், மற்றும் நீர்நிலைகளின் பாதுகாப்பையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ள உள்ளன. அதன் ஒருபகுதியாக ரூ. 489 கோடியில் 48 புதிய திட்டங்கள் மூலம் நீர் மேலாண்மை திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

2023-ல் ‘பெஞ்சல்’ புயல் தாக்கியபோது, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள அணைக்கட்டு பெரிதும் சேதமடைந்தது. இதனை ₹130 கோடி செலவில் முற்றாக மறுசீரமைப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இது, மாவட்டத்தின் நீர்ப்பாசன வசதி மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கியமான திட்டமாக இருக்கிறது.

முக்கிய கட்டுமான பணிகள்:

திருப்பூர் மாவட்டம் – பெரிய குமாரபாளையம்

ஊப்பாறு ஓடை குறுக்கே ₹7.98 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்படுகிறது.

இது, நெறியோடை பகுதியில் வெள்ளத்தை கட்டுப்படுத்தவும், நிலத்தடி நீரை நிரப்பவும் உதவும்.

மதுரை – கவுண்டா நதி

நதியின் குறுக்கே ₹5 கோடி செலவில் அணைக்கட்டு அமைக்கப்படுகிறது. இது சுற்றியுள்ள கிராமங்களுக்கு நீர்ப்பாசன வசதியை உறுதி செய்யும்.

விருதுநகர் – காரியப்பட்டி அருகே குண்டாறு அணைக்கட்டின் குறுக்கே ₹23.8 கோடி செலவில் புதிய கட்டுமான பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த அணை புதுப்பிப்பு விவசாய நிலங்களுக்கு நீர் விநியோகம் மேம்பட உதவும்.

கள்ளக்குறிச்சி – வானபுரம் அருகே தென்பெண்ணையாற்றின் குறுக்கே ₹75 கோடியில் புதிய அணை கட்டப்பட உள்ளது. இதுவும் பெரிய அளவில் நீர் சேமிப்பு மற்றும் பாசன வசதிகளை உருவாக்கும்.

திண்டுக்கல் – மாங்கரை ஆறு, இங்கு ₹4.10 கோடியில் அணைக்கட்டு கட்டப்பட உள்ளது.

6 மாவட்டங்களில் நீர்ப்பாசன கட்டமைப்புகள் புதுப்பிப்பு

திருச்சி, திருவாரூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி ஆகிய மாவட்டங்களில், பழைய நீர்ப்பாசன கட்டமைப்புகளை மேம்படுத்துதல், வெள்ள தடுப்பு சுவர் கட்டுதல், ரெகுலேட்டர்கள் புதுப்பித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணிகள் அனைத்தும், பசுமை விவசாயம், நீர் சேமிப்பு மற்றும் தடுப்புப் பாதுகாப்புக்கான அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தும்.

வைகை ஆற்றின் கரையோர திட்டம்

மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களில்: வைகை ஆற்றின் கரைகளில் நீர்வளத் துறையின் ‘லோகோ’வுடன் கூடிய எல்லைக்கற்கள் நடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது ஆற்றின் வரம்புகளை சட்டபூர்வமாக நிர்ணயிக்கும் வகையில், ஆற்று நிலங்களை பாதுகாக்கும் முயற்சியாகும்.

கடலரிப்பு தடுப்பு, நிலத்தடி நீர் மேம்பாட்டு திட்டங்கள்

இந்த ஒருங்கிணைந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கடலரிப்பு பகுதியில் அலை தடுப்பு, கரைசேர் கட்டுமானங்கள், மற்றும் கடல் புகுமுகங்களை பாதுகாப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நிலத்தடி நீரை மேம்படுத்தும் வகையில், ரீச்சார்ஜ் கிணறுகள், சர்க்குலர் சேம்பர்கள், மற்றும் நீர் வடிகால் திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. மொத்த திட்ட மதிப்பு: ₹2,000 கோடி

இந்த 48 பணிகள் ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாகவே செயல்படுத்தப்படுகின்றன. தமிழக பட்ஜெட்டில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ₹2,000 கோடி ஆகும். இதைப் பல கட்டங்களாக செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டங்களை செயல்படுத்தும் பணிக்கு நீர்வளத்துறை செயலர் திரு. ஜெயகாந்தன், நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளார். இது தொடர்பான உத்தரவும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திட்டங்களின் மூலம், நீர் பற்றாக்குறையால் அவதிப்படும் பல்வேறு பகுதிகளுக்கு நீர்ப்பாசன வசதி மேம்படும். மழைநீர் சேமிப்பு, நிலத்தடி நீர் நிரப்பம், வெள்ளத்திலிருந்து பாதுகாப்பு உள்ளிட்ட பல நன்மைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற நீர்வள மேம்பாட்டு திட்டங்கள், நீர் மேலாண்மை சந்திக்கின்ற சவால்களை சமாளிக்க தமிழக அரசு எடுத்துள்ள முக்கியமான மற்றும் தேவையான நடவடிக்கைகளாக பார்க்கப்படுகின்றன.