சென்னை:

மிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகளை அமைப்பதற்கான வழிமுறைகள் குறித்து, மாநில தேர்தல் ஆணையம் அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 12,524 ஊராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன. இதில், 1,18,974 ஊரக உள்ளாட்சி மற்றும் 12,820 நகர்புற உள்ளாட்சி பதவிகள் என மொத்தம் 1,31,794 பதவிகள் உள்ளன.

இந்த பதவிகளுக்கு கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது.  அவர்களின் பதவிக்காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் முடிவடைந்தது. அதையடுத்து, தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

2016ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் தேர்தல் நடத்தப்படும் என்று  அறிவித்தது.

ஆனால்,  உள்ளாட்சி அமைப்புகளுக்கு சரியான முறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று திமுக தொடர்ந்த வழக்கால், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான  அறிவிப்பாணையை உயர்நீதி மன்றம்  ரத்து செய்தது. இது தொடர்பான வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தற்போதுதான்  உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் தமிழக அரசு  தீவிரம் காட்டி வருகிறது.  மாநில தேர்தல் ஆணையம், இதற்கான வாக்காளர் பட்டியல் குறித்து கடந்த வாரம் அரசாணை வெளியிட்டது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகளை அமைப்பதற்கான வழிமுறைகள் குறித்து மேலும் ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதனப்டி, பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும், 1200 முதல் 2400 வரை இருந்தால் 2 வாக்குச்சாவடிகளும், 2400 பேருக்கு மேல் இருந்தால் 3 வாக்குச்சாவடிகளும் அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் மாநகராட்சிகளில் 1400 வாக்களர்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும், 1400 முதல் 2800 வரை இருந்தால் 2 வாக்குச்சாவடிகளும், 2800க்கும் மேற்பட்டவர்கள் இருந்தால் 3 வாக்குச்சாவடி களும் அமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.