சென்னை: மூத்த அரசியல்வாதியும்,  திமுக பேச்சாளரும், இன்னோவா புகழ் அரசியல் பச்சோந்தியான  நாஞ்சில் சம்பத் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு விஜய் புதிய இன்னோவா கார்  வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலக்கிய பேச்சாளரான,   நாஞ்சில் சம்பத்,   திமுகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்த விலகி  மதிமுகவில் ஐக்கியமானார். பின்னர் அங்கிருந்து விலகி மறைந்த முதல்வர்  ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதனால், அவருக்கு ஜெயலலிதா புதிய பதவியையும் கொடுத்து புதிய இன்னோவா காரையும் வழங்கினார். இதனால் இன்னோவா நாஞ்சில் சம்பத் என அரசியல் கட்சியனர் மற்றும் நெட்டிசன்களால் கொண்டாடப்பட்டார்.  ஆனால், ஜெ.மறைவுக்கு பிறகு, அவர் அங்கிருந்து விலகி டிடிவி தினகரன் தலைமையிலான  அமமுகவில் இணைந்தார். பின்னர் அங்கும் ஒத்துவரவில்லை என்ற நிலையில், மீண்டும் திமுகவில் இணைந்தார். அவருக்கு பேச்சாளர் பதவி கொடுத்து திமுக பயன்படுத்தி வந்தது.

ஆனால், அங்கும் தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என புலம்பி வந்தவர், கடந்த சில காலமாக எந்தவொரு  அரசியல் நிகழ்விலும் கலந்துகொள்ளாமல் மவுனம் காத்து வந்தார். இந்த நிலையில், நேற்று (டிசம்பர் 5) திடீரென நடிகர் விஜயை சந்தித்து, அவரதுவெகவில் இணைந்துள்ளார்.

ஏற்கனவே  “விஜய் அரசியல் கட்சித் தொடங்கினால், என்னை அழைத்தால் அரசியல் ஆலோசனைகள் வழங்குவேன்” என்று அவர் கூறி வந்த நிலையில், தற்போது  விஜய் கட்சியில் இணைந்துள்ளார்.

 கடந்த சில நாட்களுக்கு முன்னர், அதிமுகவின் அடையாளங்களில் ஒருவராக இருந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். தற்போது திமுக, அதிமுக, மதிமுக என பல கட்சிகளிலும் அனுபவம் பெற்ற சிறந்த பேச்சாளரான நாஞ்சில் சம்பத்தும் தவெகவில் இணைந்துள்ளார்.

இது தொடர்பாக நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழக வெற்றிக் கழகத்தில் தம்பி விஜய் முன்னிலையில் என்னை இணைத்துக் கொண்டேன். என்னை பார்த்ததும் “நான் உங்கள் ஃபேன் தெரியுமா?” என்றார், நான் மெய்சிலிர்த்துப் போனேன். தமிழக வெற்றிக் கழகத்தை நாடு முழுக்க கொண்டு சேர்க்கின்ற பணியில் ஈடுபடுவேன். வெற்றி நமதே!” என்று தெரிவித்துள்ளார்.

யார் இந்த நாஞ்சில் சம்பத்?

கன்னியாகுமரி மாவட்டம் மணக்காவிளை எனும் ஊரில் மளிகைக் கடை வைத்திருந்த இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்த பாஸ்கரன் – கோமதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். இவர் தனது மேல்நிலைப் பள்ளிப் படிப்பை புனித மரியா கொரற்றி மேல்நிலை பள்ளியில் படித்தார். தனது பட்டப்படிப்பை நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் படித்தார். நாஞ்சில் சம்பத்தின் மனைவி பெயர் சசிகலா. இவர்களுக்கு மதிவதனி, சரத் பாஸ்கரன் என இரு குழந்தைகள் உள்ளனர்.

எந்தக் கூட்டத்தில் பேசினாலும் தனது கம்பீரமான உரையால் பார்வையாளர்களை தன் வசம் இழுப்பதில் கைதேர்ந்தவர் நாஞ்சில் சம்பத். கல்லூரிக் காலத்திலேயே தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டவர், அந்தக் காலத்திலேயே கருணாநிதியால் பாராட்டப்பட்டார்.  சிறு வயதிலேயே பேச்சில் சிறந்த விளங்கிய இவர் திமுகவில் தலைமைக் கழகப் பேச்சாளராக இருந்தார். பின்னர் வைகோ திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட போது இவரும் வெளியேறினார்.

தமிழக இலக்கிய அரங்கில் முக்கிய பேச்சாளராகவும் இரண்டாம் கட்ட தலைவர்களில் மிக சிறந்த பேச்சாளராகவும் இருக்கிறார். அதிமுக, திமுக போன்ற ஆட்சிகளில் போடப்பட்ட வழக்குகளில் பலமுறை சிறைக்குச் சென்றுள்ளார்.

கடந்த மார்ச் 1, 2009 அன்று திருப்பூரில் ‘நாதியற்றவனா தமிழன்?’ என்ற தலைப்பில், அனைத்து மாணவர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசினார். அதில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நாஞ்சில் சம்பத்துக்காக மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ வாதாடினார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து வந்தார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடனான கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெ. ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அக்கட்சியில் அவருக்கு கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது பின்னர் 2016 ஜனவரி 2ஆம் தேதி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு தினகரன் அணிக்குச் சென்றவர், அமமுக உதயமானதும் கட்சியின் பெயரில் திராவிடம் இல்லை எனச் சொல்லி தினகரனை விட்டு விலகினார். பின்னர் திராவிடப் பேச்சாளர் என்னும் அடைமொழியோடு திமுக மேடைகளில் பேசினார். ஆனால் திமுக அவரை பெரிதாக அங்கீகரிக்கவில்லை. அதனை அவருமே வெளிப்படையாகப் பல்வேறு இடங்களில் ஆதங்கத்துடன் கூறிவந்தார்.

தற்போது விஜய் கட்சியில் இணைந்துள்ளார். அவரது  இலக்கிய பேச்சுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ள நிலையில், அவரது  அநாகரிக அரசியல், அரசியல் பேச்சு, பச்சோந்தி அரசியல், மக்களிடையே அவர்மீதான மதிப்பை குறைத்து  வெறுப்பை ஏற்படுத்தியது என்பதையும் மறந்துவிட முடியாது.

விஜய் கட்சியில் இணைந்துள்ளது குறித்த செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், என்னைப் பார்த்ததும் விஜய், “நான் உங்கள் ரசிகன்” என்று தெரிவித்தார். அப்படி அவர் சொன்னதும் நான் மெய்சிலிர்த்துப் போனேன். இப்படி ஒரு அங்கீகாரத்தை அவர் வழங்குவார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

கரூர் துயரத்துக்கு சிபிஐ விசாரணைக்கான உத்தரவை உச்சநீதிமன்றம் வழங்கியபோது ஊடகங்களுக்கு பேட்டி அளித்த நான், இது தவெக-வின் வெற்றி என்று குறிப்பிட்டிருந்தேன். அந்த நிமிடத்திலிருந்து அறிவாலயத்தில் இருந்து காது கொடுத்து கேட்க முடியாத வார்த்தைகளால் என்னை வசைபாடினர். தொடர்ந்து என் வயிற்றில் அடிப்பது போல, ஏற்கெனவே முடிவாகி இருந்த எனது நிகழ்ச்சிகளை ரத்து செய்தனர். திமுக நிகழ்ச்சிகளில் என்னை நக்கலும் நையாண்டியும் செய்தனர். மேடைகளில் வசை பாடினர். அதனால் நான் மனதளவில் உடைந்து போனேன். மேலும், எனக்கு பல்வேறு மிரட்டல்களும் வந்தன.

திராவிட இயக்க சித்தாந்தத்தை வழிகாட்டும் பெரியாரை தான் விஜய் முன்னிறுத்துகிறார். அதனால் திராவிட கட்சியின் நீட்சியாகவே விஜய்யை பார்க்கிறேன். விஜய் என்ன மாற்றத்தை கொண்டு வரப் போகிறார் என்பது அவர் அறிவிக்க உள்ள தேர்தல் அறிக்கை மூலம் தெரியும். தமிழக அரசியலில் அதிக அளவு இளைஞர்களை விஜய் ஈர்த்து வைத்து இருக்கிறார். நிச்சயம் இளைஞர்கள் மூலம் மாற்றத்தை அவர் கொண்டு வருவார்.

இவ்வாறு கூறினார்.

[youtube-feed feed=1]