சென்னை: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் 40 நாட்களில் தீர்வு காணப்படும் என்று கூறியுள்ளார் மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார்.
விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றில் பேசிய பிரதாப் குமார்,
“தகவல் அறியும் உரிமை சட்டம், பாமர மக்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டமாகும். பொது மக்கள் தமக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண, மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்கள் என பல்வேறு நிலைகளை நாடுகின்றனர். பல ஆண்டுகளாக வழக்குகள் நடக்கின்றன.
ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நாடினால், மாநில தகவல் ஆணையரின் முன்பாக, மனுதாரரே நேரில் ஆஜராகி, பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு ஏற்படும் வாய்ப்பு கிடைக்கிறது. இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், தகவல் உரிமைச் சட்டத்தில் கிராமப்புறங்களை சார்ந்தவர்களே அதிகம் தீர்வு காண்கின்றனர்.
ஆனால், சென்னை போன்ற நகரங்களில், எவ்வளவோ பிரச்சினைகள் இருந்தும், நகரம் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் இச்சட்ட வசதியை மக்கள் நாடுவதில்லை. மாறாக, குறுக்கு வழியில் பணம் கொடுத்து எதையும் சாதிக்கலாம் என்றே எண்ணுகின்றனர்.
தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட அரசு துறைகள் உள்ளன. அனைத்து துறைகளிலும், பொது மக்கள் விண்ணப்பித்த 30 நாட்களில் அவர்களுக்கு பதில் தர வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் 29 பிரிவுகள் உள்ளன. இவற்றில், 5 பிரிவுகளை நாம் தெளிவாக தெரிந்து கொண்டால், தலைமை அதிகாரிகள் முதல், அமைச்சர்கள் வரை, நாம் யாரிடமும் போய் நிற்க வேண்டியதில்லை.
ஒருவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மனு செய்து, 30 நாட்களில் சரியான பதில் இல்லை எனில், அடுத்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி செய்தால், அந்த மனுவை, தகவல் ஆணையரே விசாரிப்பார். பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும்.
அரசு நிர்வாகத்தின் வெளிப்படை தன்மை குறித்து அறிய, தகவல் உரிமைச் சட்டத்தை எல்லோரும் பயன்படுத்த வேண்டும். மக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வு அதிகம் ஏற்பட வேண்டும்” என்று விளக்கினார்.