டில்லி

னைத்துக் கட்சிகளிலும் உட்கட்சி மோதல் உள்ளதாக மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸில் தற்போது மகாராஷ்டிரா, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உட்கட்சி மோதல் உள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.   சமீபத்தில் அரியானா சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பு அங்கு இரு கோஷ்டியினிடையே ஏற்பட்ட மோதல் தலைவர் சோனியா காந்தியில் இல்லத்துக்கு முன்பு போராட்டம் நடத்தும் அளவுக்குச் சென்றது.

கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பு இருந்தே மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் மற்றும் ஜோதித்ராதித்ய சிந்தியா ஆகியோரிடையே தலைமைப் பதவிக்கு கடும்  போட்டி நிலவி வருகிறது.   கமல்நாத் மாநில முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் என இரு பொறுப்புக்களை வகித்து வருகிறார்.    தனக்கு இரண்டில் ஒரு பொறுப்பு வேண்டும் என சிந்தியா போராடி வருகிறார்.

இந்நிலையில் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் ஒரு தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்துள்ளார்.  அப்போது அவர், “காங்கிரஸ் கட்சியில் மகாராஷ்டிரா, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உட்கட்சி மோதல் இருப்பதாகக் குறை  கூறுகின்றனர்.  அனைத்துக் கட்சிகளிலும் உட்கட்சி மோதல் உள்ளன.   காங்கிரஸ் பெரிய கட்சி என்பதால் அதைக் குறித்து பலரும் பேசி வருகின்றனர்.

எனக்கும் ஜோதித்ராதித்ய சிந்தியாவுக்கும் இடையில் எவ்வித தகராறும் இல்லை.   அவர் தலைவராக ஆசைப்படுவதாகச் சொல்கின்றனர்.    அவர் ஏன் ஆசைப்படக் கூடாது?  அவருக்கு அதற்கான அனுபவம் திறமை அனைத்தும் உள்ளது.  உண்மையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித திறமை உள்ளது.  அவருக்கும் விரைவில் ஒரு வாய்ப்பு அளிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.