பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாலியல் வன்புணர்வு என்பது இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலும் நடைபெற்று வருகிறது. அதுவும் குழந்தைக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. இதற்கு கடுமையான தண்டனை வேண்டுமென்று உலகமெங்கும் சமுக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதுபோன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும் என இந்தோனேசியா அரசு சட்டம் இயற்றி உள்ளது.
இந்த சட்டத்தில் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ கடந்த புதன்கிழமை கையெழுத்திட்டார். இதன் காரணமாக இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த சட்டத்தின் மூலம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு ரசாயணம் மூலம் ஆண்மை நீக்கம் செய்யப்படும் என்றும், மேலும் இந்த ரசாயன ஆண்மை நீக்கம் சரியான முறையில் நடைபெற்றுள்ளதா என்பதை அறிய, மீண்டும் எலக்ட்ரானிக் இயந்திரம் பொருத்தி சரிபார்க்கப்படும் என கூறினார்.
கடந்த எப்ரல் 14 தேதி இந்தோனேசியாவின் சுமத்திர தீவில் 14 வயது சிறுமி கற்பழித்து கொலைசெய்யப்பட்டார். இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த விசயம் நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து இந்த புது சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இது குறித்து பேசிய இந்தோனேசிய அதிபர், இந்த சட்டத்தை இனி நீதிமன்றங்கள் நடமுறைபடுத்தலாம் என்றும், கடந்த சில வருடங்களாக இந்தோனேசியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் இது மிகுந்த மனவருத்தம் அளிப்பதாகவும் கூறினார். மேலும் ஏற்கனவே இருந்த 10 ஆண்டு சிறை 20 ஆண்டுகளாக மாற்றப்படும் என்றார். ஏற்கனவே, கடந்த ஆண்டு போதை பொருள் கடத்தியதாக ஒரு ஆஸ்திரேலியருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை உலக அளவில் கண்டனத்துக்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, இந்தோனேசிய சமுக அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு நாளைக்கு 35 பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாவதாக தெரிவித்து உள்ளது. தற்போது இயற்றியுள்ள சட்டத்தால் பாலியல் குற்றங்கள் குறையலாம் என எதிர்பார்ப்பதாக கூறி உள்ளது.
இந்த சட்டம் ஏற்கனவே ஆஸ்திரேலியா, தென்கொரியா, ரஷியா போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இரசாயன ஆண்மை நீக்கம் முதன் முதலில் 1940ல் சோதனை செய்யப்பட்டது. இந்த இராசயன ஆண்மை நீக்கம் செய்வதனால் உளவியல் ரீதியான மேலும் சில பிரச்சனைகளுக்குவழிவகுக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.