சென்னை:

திருச்சி – சென்னை இடையே ஜூன் 1-ந்தேதி முதல் புதிய விமான சேவை தொடங்க இருப்பதையடுத்து, விமான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் உதான் திட்டத்தின்படி ஏற்கனவே சேலம் சென்னை இடையே சிறிய ரக விமான சேவை தொடங்கப்பட்ட நிலையில், வரும் ஜூன் 1ந்தேதி முதல் திருச்சி சென்னை இடையே விமான சேவை தொடங்க உள்ளது.

தற்போது, திருச்சி – சென்னை இடையே ஏற்கெனவே காலை 8.40க்கு ஏர் அலையன்ஸ் விமானமும், முற்பகல் 11.15, மாலை 6, இரவு 10.40 மணி ஆகிய 3 நேரங்களில் ஜெட் ஏர்வேஸ் விமானமும் இயக்கப்பட்டு வருகீன்றன.

இந்நிலையில்,  இன்டிகோ நிறுவனம் ஜூன் 1-ம் தேதி முதல் புதிய விமான சேவையைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

அதன்படி  காலை 9.35, பகல் 12.25, 2.25, மாலை 5.30, இரவு 7.10 என தினமும் 5 முறை திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன

உள்நாட்டுப் போக்குவரத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒருநாளைக்கு  5 முறை விமானம் இயக்கப்பட இருப்பதாக இன்டிகோ கூறி உள்ளது.

தற்போது டிக்கெட்டின் விலை சீசனுக்கு தகுந்தாற்போல ரூ.3,500 முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டு வரும்நிலையில், தற்போது விமான கட்டணத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி  முன்கூட்டியே பயணச்சீட்டு பதிவு செய்யும் பயணிகளுக்கு  குறைந்தபட்சக் கட்டணமாக ரூ. 2,499 என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஏற்கெனவே களத்தில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் தனது குறைந்தபட்சக் கட்டணம் ரூ. 2,572 எனவும், ஏர் அலையன்ஸ் 2,754 ஆகவும் நிர்ணயித்துள்ளதாக அறிவித்துள்ளன.

இந்த அதிரடி கட்டணக் குறைப்பால், திருச்சி – சென்னை இடையே விமானப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.