திருவனந்தபுரம்:

சீனாவில் இருந்து கேரளா திரும்பியவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில், 3 பேரும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், அவர்கள் குணமடைந்துவிட்டதாகவும்  கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இது பெரும் வரவேற்பையும், பாராட்டுதலையும்  பெற்றுள்ளது.

கேரளாவில் இருந்து பரவி வரும் கொரோனா வைரஸ், உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இதற்கிடையில், அங்கிருந்த தாயகம் திரும்பிய கேரள மாநிலத்தவர்கள் முதலில் ஒரு பெண்ணுக்கு  கொரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. பரிசோதனையின் முடிவில் அப்பெண்ணுக்கு வைரஸ் தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து சீனாவில் இருந்து திரும்பிய மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இறுதியாக கடந்த 3ந்தேதி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் அனைவரும்,  கேரளாவின் காசர்கோடு, மத்திய கேரளாவின் திருச்சூர் மற்றும் தெற்கு கேரளாவின் ஆலப்புழா ஆகிய மூன்று வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது.

இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் நோய் தாக்குதலால் சிகிச்சை பெற்றவர்கள் கேரளாவில் மட்டுமே… இந்த நிலையில், நோயாளிகளுக்கு   தேவையான சிகிச்சையை கேரள மாநில சுகாதாரத்துறை கவனித்து வந்தது. மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே ஷைலஜாவும் அவ்வப்போது மருத்துவமனைக்கு விசிட் செய்து, எடுக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து, சிகிச்சையை துரிதப்படுத்தி வந்தார்.

இந்த நிலையில், மூன்று கொரோனா வைரஸ் நோயாளிகள் குணமடைந்து உள்ளார்கள் என்று கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இது அனைத்து தரப்பினரிடமும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இதுகுறித்து கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் பதிவிட்டுள்ள டிவிட்டில்,  மூன்று கொரோனா வைரஸ் நோயாளிகளும் முழுமையாக குணமடைந்துவிட்டனர் என்றும்,  “நிபாவைப் போலவே, கேரளா கொரோனா வைரஸுடனான போரில் கேரளா வெற்றி பெற்றுள்ளது. அடையாளம் காணப்பட்ட மூன்று நோயாளிகளும் முழுமையாக குணமடைந்துள்ளதாக மத்திய அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று  தெரிவித்து உள்ளார்.