மும்பை

ந்தியாவில் உள்ள பழங்கால அணைகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அளிப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியா பெரும்பாலும் ஆற்றுப்பாசனத்தையே நம்பி உள்ளது.   எனவே கோடைக்காலங்களில் நீர் பஞ்சம் ஏற்படாமல் தடுக்க பல அணைகள் நீண்ட காலங்களுக்கு முன்பே கட்டப்பட்டுள்ளது.  தற்போது இந்தியா முழுவதும் உள்ள 4,407 பெரிய அணைகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட அணைகள் 50 வருடத்துக்கும் அதிக வருடங்கள் பழமையானதாகும்.   பழைய அணைகள் பாதுகாப்பு அச்சுறுத்தலை அளிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

அவ்வகையில் சமீபத்தில் அணைகள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டு ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.   இந்த ஆய்வை கனடா நாட்டை சேர்ந்த ஐநா பல்கலைக்கழகத்தின் நீர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார கல்வி நிலையம் நடத்தி உள்ளது.   அந்த அறிக்கையில் காணப்படும் முக்கிய விவரங்களைப் பகுதி பகுதியாக காண்போம்.  இதோ இரண்டாம் பகுதி

அதிக எண்ணிக்கையில் அணைகள் உள்ள நாடுகளில் இந்தியா உள்ளது.  இந்தியாவில் 4,407 பெரிய அணைகள் உள்ளன.  முதல் இடத்தில் 23,841 அணைகளுடன் சீனாவும்  9,263 அணைகளுடன் அமெரிக்காவும் உள்ளன.  இந்தியாவில் வரும் 2025 ஆம் ஆண்டில் 4250 அணைகள் 50 ஆண்டுக் காலத்தைக் கடந்ததாக இருக்கும்.  அதில் 64 பெரிய அணைகள் 150 வருடத்தைத் தாண்டியதாக இருக்கும்.

பெரும்பாலும் மண்ணால் கட்டப்பட்டுள்ள அணைகள் இந்தியாவில் அதிகம் உள்ளதால் காங்கிரீட்டால் கட்டப்பட்ட அணைகளை விட இவற்றின் ஆயுட்காலம் குறைவாகவே இருக்கும்.  மேலும் இந்தியாவில் ஒரே நேரத்தில் அதிக அளவில் மழை பெய்வதும் மீதமுள்ள நாட்களில் மழையே இல்லாததும், வழக்கமாக நடைபெறுவதாகும்.   மழைக் காலத்தில் பெரும்பாலான சமயங்களில் எதிர்பார்ப்பை விட மழை  பெய்வதால் அணைகள் திறக்கப்படுவதும் வெள்ளம் ஏற்படுவதும் அடிக்கடி நிகழ்கின்றன.

இந்திய அணைகளின் ஆயுட்காலம் குறைவாக உள்ளதற்கு மேலே கூறப்பட்டவையும் முக்கிய பங்கு வகிக்கின்றன.   அதிலும் பெரும்பாலான அணைகளில் வண்டல் மண் சேர்ந்து அணையின் கொள்ளளவு கணிசமாகக் குறைவதால் ஓரளவு மழை பெய்தாலே உபரி நீரைத் திறக்கும் நிலை பல அணைகளில் உள்ளது.   குறிப்பாகக் கிருஷ்ணா நதியில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ சைலம் அணையைக் கூறலாம்.

அணைகளின் கட்டுமானத்தில் பழுதுகள் ஏற்படும் போது முழுக் கொள்ளளவை எட்டும் முன்பே நீரைத் திறந்து விட வேண்டிய நிலை ஏற்படுகிறது.   இவ்வாறு அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதால் ஆற்றின் கரைகள் அரிக்கப்பட்டு ஊருக்குள் நீர் புகும் நிலை ஏற்படுகிறது.   எனவே ஒரு சில சமயங்களில் அணைகளில் இருந்து நீர் திறக்க அஞ்சும் நிலை உண்டாகிறது.  இதனால்  அணைகளின் ஆயுட்காலம் பெருமளவில் குறைகிறது.

இவ்வாறு அணைகளின் ஆயுள் குறைவு உண்டாவது 44% வரை உள்ளது.  மீதமுள்ளவை வண்டல் மண் சேருதல், கொள்ளளவு குறைதல்., பழுதடைந்த குழாய்கள், மட்டமான கட்டுமானம் ஆகியவற்றால் உண்டாகிறது.   முக்கியமாக வெப்பநிலை மாறுதலும் அணைகள் ஆயுட்காலம் குறைவில் முக்கிய பங்கு வகிக்கிறது.   வெப்ப நிலை மாறுதலால் அணைக்கு எப்போது நீர் வரும் எனச் சரியாகக் கணிக்க முடியாததால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுவது பல அணைகளில் சரிவர நடப்பதில்லை.

தொடரும்

விரைவில் மூன்றாம் பகுதியில் சந்திப்போம்