டெல்லி: இந்தியாவில் முதன்முதலாக கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு மங்கிபாக்ஸ் (குரங்கு அம்மை) தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு இறுதியில், உலகில் பேரழிவை ஏற்படுத்தி கொரோனா என்ற பெருந்தொற்று நோய் பாதிப்பும் முதன்முதலில் கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்குத்தான் உறுதி செய்யப்பட்டிருந்தது.

Sample picture

இந்தியாவில் முதல்முறையாக கேரளாவைச் சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைக ளுக்காக உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அனுப்பி உள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் சோதனை நடத்தப்பட்ட வருகிறது.

மங்கிபாக்ஸ் எனப்படும் இந்த தொற்று 1970ம் ஆண்டு ஆப்பிரிக்கா நாடான காங்கோவில் பரவத்தொடங்கியுள்ளது. குரங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதால் இந்த நோய் ‘மங்கி பாக்ஸ்’ என அழைக்கப்படுகிறது. மங்கி பாக்ஸ் வைரஸ் Poxviridae குடும்பத்தில் உள்ள Orth poxvirus இனத்தைச் சேர்ந்தது. இந்த வைரஸ் பெரியம்மை, பசு, குதிரை மற்றும் ஒட்டகம் போன்றவற்றில் இருந்து பரவும் பாக்ஸ் நோயைச் சார்ந்தது.

இந்த நோய் சமீபகாலமாக மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது என உலக சுகாதார மையம் தெரிவித்த உள்ளது. உலகின் 60க்கும் மேற்பட்ட நாடுகளில், 9,000க்கும் மேற்பட்டோருக்கு இந்த மங்கிபாக்ஸ் தொற்று இதுவரை பரவியுள்ளது.  இந்த நிலையில், தற்போது இந்தியாவில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

 ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கடந்த 12ஆம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது என கேரள மாநில  சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அனைத்து உடல் உறுப்புகளும் இயல்பாக இயங்கி வருவதாகவும் கூறிஉள்ளார். மேலும்,  அவருடன் முதன்மை தொடர்பில் இருந்தவர்களான தந்தை, தாய், கார் ஓட்டுநர்கள், விமானத்தில் உடன் பயணித்த 11 பேர் ஆகியோர் கண்டறியப்பட்டுள்ளதாகவும், உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள வழிமுறைகளின்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வீனா ஜார்ஜ் கூறினார்.

இதுகுறித்து  தகவல் அறிந்த மத்திய சுகாதாரத்துறை, கேரள அரசுக்கு உதவுவதற்காக உயர்மட்டக் குழுவை  அனுப்பியுள்ளது. இந்தக் குழுவினர் நேரில் ஆய்வுசெய்து, மாநில அரசுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.