அகர் மால்வா
இந்தியாவில் முதல் முறையாக மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு பசுக்கள் சரணாலயம் தனியார் மயமாக்கப்பட உள்ளது.
மத்திய பிரதேசத்தில் போபால் நகருக்கு 190 கிமீ வடகிழக்கே உள்ள அகர் மால்வா நகரில் உள்ள காமதேனு கோ அபியாரண்யா என்னும் பசுக்கள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் 472 ஹெக்டேரில் அமைந்துள்ளது. இதில் 4000 பசுக்கள் வசிக்கின்றன. இந்த சரணாலயம் கடந்த 2017 ஆம் ஆண்டு அப்போதைய பாஜக அரசால் தொடங்கப்பட்டது.
இந்த சரணாலயத்தின் தவறான மேலாண்மையால் பசுக்கள் மரணம் அடைவது பல முறை நடந்துள்ளது. அரசு இந்த சரணாலயத்தில் வசதிகளை மேம்படுத்த பலமுறை முயன்றும் அதுநடக்கவில்லை. இதற்காக மத்திய பிரதேச பசு பாதுகாப்பு வாரியம் ரூ.32 கோடி செலவிட்டுள்ளது. ஆயினும் எவ்வித முன்னேற்றமும் காணாததால் மேலும் செலவழிக்க அரசிடம் நிதி இல்லை என கூறப்படுகிறது.
எனவே இந்த சரணாலயத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்தியபிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இந்த சரணாலயத்தை ஏற்று நடத்த அட்சயப்பாத்திரா என்னும் தன்னார்வு தொண்டு நிறுவனம் முன் வந்துள்ளது. இந்நிறுவனம் லாபமும் இல்லாமல் நஷ்டமும் இல்லாமல் நிர்வகிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது இந்த சரணாலயத்தில் இருந்து கிடைக்கும் வருமானம் முழுவதும் சரணாலயத்துக்கே செலவழிக்க ஒப்புக் கொண்டுள்ளது.
ஆயினும் அரசு தரப்பில் அட்சயப் பாத்திரா குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவிலை. ஏற்கனவே அட்சயப் பாத்திரா சிறிய அளவிலான கோசாலைகளை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்
இவ்வாறு பசுக்கள் சரணாலயம் தனியார் மயமாக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
இது குறித்து ம பி அமைச்சர் லகன்சிங் யாதவ், “நாங்கள் தனியார் பங்களிப்பை கோருகிறோம். முழுமையாக தனியாருக்கு விற்று அவர்கள் இதன் மூலம் பொருளீட்ட நாங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. எனவே மதம் மற்றும் சமூக சார்புள்ள நிறுவனங்களிடம் பொறுப்பை ஒப்படைக்க உள்ளோம்” என கூறி உள்ளார்.