டெல்லி:

ந்தியாவின் முதல் முப்படைத் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஜெனரல் பிபின் ராவத் நாளை தனது பதவியை ஏற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக அவர் இன்றுடன் தனது ராணுவ தளபதி பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகிய முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் நோக்கில், முப்படைகளின் தலைமைத் தளபதி பதவி உருவாக்கப்படும் என, பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்டு 15ந்தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேசியிருந்தார். இதையடுத்து,, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை, நாட்டின் முதலாவது முப்படைத் தலைமைத் தளபதி பதவிக்கு ஒப்புதல் வழங்கிய நிலையில், அதற்கான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டன.

இந்த நிலையில், ராணுவ தளபதி பொறுப்பில் இருந்து பிபின் ராவத் இன்று அவர் ஓய்வு பெற இருந்த நிலையில், அவரை நாட்டின் முதல் முப்படைகளின் தலைமை தளபதியாக மோடி அரசு நியமனம் செய்துள்ளது.

இதையடுத்து, ஜெனரல் பிபின் ராவத், நாளை முப்படைகளின் தலைமை தளபதியாக பதவியேற்க உள்ளார். அவரது பதவி காலம் 3 ஆண்டுகள்.  வருகிற 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அவர் பணியில் நீடிப்பார்.

இதையடுத்து, பிபின் ராவத்தை கவுரவிக்கும் வகையிலும், அவரது ராணுவ தளபதி பணி ஓய்வை கவுரவப்படுத்தும் வகையிலும் முழு ராணுவ மரியாதை வழங்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து, இந்தியா கேட் பகுதியில் உள்ள தேசிய போர் நினைவகத்திற்கு வந்த பிபின் ராவத், மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர்,  இந்தியாவின் ராணுவ வலிமையை, உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட உள்ளதாகவும்,  எல்லையில் பாகிஸ்தான் மற்றும் சீனாவிடமிருந்து சவால்களை எதிர்கொள்ளவும், இந்திய ராணுவம்  தயாராக உள்ளதாகவும்  தெரிவித்தார்.

இந்தியாவின் முதல் முப்படைத் தலைமை தளபதியாக பதவியேற்க உள்ள பிபின் ராவத்துக்கு அமெரிக்கா வாழ்த்துத் தெரிவித்துள்ளது. இந்தியா உடனான பரஸ்பர ராணுவ உறவுகளை மேம்படுத்த, புதிய பதவி உதவும் என அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.