புது டெல்லி:
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 41.61 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா முழுவதும் கொரோனா நோயிலிருந்து இதுவரை மொத்தம் 60 ஆயிரத்து 490 நோயாளிகள் மீண்டுள்ளதாக தெரிவித்தார். இதன் காரணமாக மீட்பு வீதம் தொடர்ந்து மேம்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போது இது 41.61 சதவீதமாக இருப்பதாக குறிப்பிட்டார்.
கொரோனா தொற்று பாதித்து உயிரிழப்போர் விகிதம் உலகிலேயே மிகவும் குறைவாக உள்ளதை சுட்டிக்காட்டிய லாவ் அகர்வால், இந்தியாவில் 2.87 சதவீதம் என்ற அளவில் இறப்பு விகிதம் உள்ளதாக தெரிவித்தார்.
இந்திய மக்கள் தொகையில் ஒரு லட்சம் பேரில் 10.7 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாகவும் லாவ் அகர்வால் குறிப்பிட்டார்.