வாஷிங்டன்
இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி ’617’ உருமாறிய கொரோனாவை தடுக்கிறது என அமெரிக்க மருத்துவர் அந்தோணி ஃபாசி புகழ்ந்துள்ளார்.
இந்தியாவில் தற்போது இரண்டு வகை கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தி ஆகின்றன. இவற்றில் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா நிறுவன கண்டுபிடிப்பாகும். மற்றொரு தடுப்பூசியான கோவாக்சின் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஐ சி எம் ஆர் உடன் இனைந்துக் கண்டுபிடித்து அதே நிறுவனம் உற்பத்தி செய்யும் மருந்தாகும்.
இந்த கோவாக்சின் தடுப்பூசி குறித்து ஐ சி எம் ஆர் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”இந்தியத் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பு மருந்து, பிரிட்டன், பிரேசில் ஆகிய நாடுகளில், உருமாறிய கொரோனா வைரசை எதிர்க்கிறது. இரட்டை உருமாறிய கொரோனா வைரசையும், கோவாக்சின் அழிக்கிறது’ எனக் கூறியுள்ளது. கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையின், இரண்டாவது இடைக்கால அறிக்கையில், பாரத பயோடெக் நிறுவனம், கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு, கோவாக்சின் தடுப்பூசி, 100 சதவீத பலனை அளிப்பது, உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் புகழ்பெற்ற மருத்துவரும் வெள்ளை மாளிகை மருத்துவ ஆலோசகருமான அந்தோணி ஃபாசி, “கொரோனா பாதிப்பு குறித்து தினசரி பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவ்வகையில் மிகச் சமீபத்தில் வெளியான தகவலின் படி ‘617′ உருமாறிய கொரோனா வைரஸ் என்பது மிகவும் மோசமான ஒன்றாகும். இந்தியத் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி மருந்து இந்த வைரசைத் தடுக்கிறது. எனவே இந்தியாவில் தற்போது கொரோனா தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு உள்ளது என்றாலும் இந்த மருந்து கொரோனாவை தடுப்பதில் முக்கிய இடம் வகிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.