டில்லி
ஏற்கனவே பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் 8 முக்கிய தொழில்கள் கடந்த 50 மாதங்களாகத் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகின்றன.
இந்தியத் தொழில்களில் மொத்தம் 8 முக்கியமானதாகக் கூறப்பட்டு வருகின்றன. அவை நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, எண்ணெய் சுத்திகரிப்பு, உரம், இரும்பு, சிமிண்ட் மற்றும் மின்சாரம் ஆகும். இந்த தொழில்களின் வளர்ச்சியைப் பொறுத்தே நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது. இந்த தொழில் இனங்கள் கடந்த 50 மாதங்களாக வீழ்ச்சி அடைவதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
கடந்த திங்கள் கிழமை வெளியான எட்டு முக்கிய தொழில் இனங்களில் கடந்த வருடம் 7.8% வளர்ச்சி அடைந்துள்ளது ஆனால் இந்த வருடம் 0.2% மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. முக்கியமாக சிமெண்ட், எண்ணெய் சுத்திகரிப்பு, மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளன. இந்த முக்கிய இனங்களின் வளர்ச்சி பொருளாதார வளர்ச்சியில் 41% பங்கு வகிக்கின்றன.
உதாரணமாக சிமெண்ட் உற்பத்தி என்பது நாட்டின் வீட்டு வசதி மற்றும் கட்டுமானத்துறை வளர்ச்சியை பெரிதும் எதிரொலிக்கிறது. அது மட்டுமின்றி இந்த உற்பத்தி நாட்டின் உட்கட்டமைப்பான சாலை வசதியிலும் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த புள்ளி விவரத்தின் படி சிமிண்ட் உற்பத்தி 1.5% வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதைப் போல் எண்ணெய் சுத்திகரிப்பு தொழில் வீழ்ச்சியினால் பெட்ரோல் மற்றும் டிசல் இறக்குமதி அதிகரிக்கிறது. மேலும் வரும் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் பல அரசு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் இறக்குமதி மேலும் அதிகரிக்க நேரிட வாய்ப்புள்ளது.
எனவே நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மேலும் அதிகரிக்கக் கூடும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.