புதுடில்லி :
கச்சா எண்ணெய் விலை சரிவால் வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் படிப்படியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதனால் இந்தியாவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த சுமார் 7 மில்லியன் பேர் வளைகுடா நாடுகளில் ஒப்பந்த அடிப்படையில் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்கள். அந்நாடுகளில் இருக்கும் நிறுவனங்களில் கட்டுமான தொழிலாளர்களாகவும், மின்சார தொடர்பான பணிகளிலும் ஏராளமானவர்கள் பணிபுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு ஏற்பட்டுள்ளதால், வளைகுடா நாடுகளில் பொருளாதார நிலை மந்தமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்நாடுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள், தங்களின் ஒப்பந்த விதிமுறைகளில் பல புதிய கெடுபிடிகளை சேர்த்துள்ளன.
இதனால் அங்கு பணிபுரியும் ஊழியர் பலருக்கும் பேசியபடி சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் படிப்படியாக பலர் வேலையிலிருந்து நீக்கப்படுவதும் நடக்கிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் மட்டும் சுமார் 1000 ஊழியர்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
மேலும் பல நிறுவனங்களும் ஆட்குறைப்பு என்ற பெயரில் இந்திய தொழிலாளர்கள் பலரை வெளியேற்ற திட்டமிட்டுள்ளன. இதனால் இந்தியர்கள் பலர் ஒரே நேரத்தில் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel