மும்பை: கனடா நாட்டில் நிரந்தரக் குடியுரிமைப் பெறுகின்ற இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டு காலகட்டத்தில் 51% அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் 39500 இந்தியர்கள், கனடாவில் எக்ஸ்பிரஸ் என்ட்ரி முறையில் நிரந்தரக் குடியுரிமைப் பெற்றார்கள். கடந்த 2018ம் ஆண்டில் மட்டும், மொத்தம் 92000 பேர் எக்ஸ்பிரஸ் என்ட்ரி முறையில் புதிதாக நிரந்தரக் குடியுரிமைப் பெற்றார்கள். இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 41% அதிகம் என்று கூறப்படுகிறது.

கடந்த 2017ம் ஆண்டில், 65500 நபர்களுக்கு மட்டுமே எக்ஸ்பிரஸ் என்ட்ரி முறையில் கனடாவில் நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது. அதில் 26300(40%) பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, கடந்த 2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2018ம் ஆண்டில் நிரந்தரக் குடியுரிமைப் பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 51% உயர்ந்துள்ளது.

இந்த விஷயத்தில், இரண்டாமிடத்தில் இருந்து சீனா, மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது. கடந்த 2018ம் ஆண்டில் 5800 சீனர்கள் மட்டுமே கனடாவின் நிரந்தரக் குடியுரிமை சலுகையைப் பெற்றனர். நைஜீரியா இரண்டாமிடத்தைப் பெறுகிறது.