வாஷிங்டன்: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் பெய்துவரும் மிக மோசமான கன மழையால், அந்நாட்டு அதிபரின் அதிகாரப்பூர்வ இருப்பிடமான வெள்ளை மாளிகையின் கீழ்தளத்திற்குள்ளேயே நீர்க்கசிய ஆரம்பித்துவிட்டது.

வாஷிடங்டனில் பெய்துவரும் மழையால் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கார்கள் தண்ணீரில் மிதக்கின்றன. அவற்றுக்குள் சிக்கியிருக்கும் ஆட்களை மீட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. “இது ஒரு அபாய கட்டம். எனவே, அவசரகால நடவடிக்கைகள் தேவை” என்று அந்நாட்டின் தேசிய வானிலை சேவைகள் மையம் தெரிவித்துள்ளது.

ரீகன் சர்வதேச விமான நிலையத்தில் மட்டும் காலை 9 மணிமுதல் 10 மணிக்குள் 8.4 செ.மீ. மழைப் பதிவானது. அந்த விமான நிலையம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கடந்த 1958ம் ஆண்டு 5.6 செ.மீ. மழைப்பதிவானதே இதுவரை அதிகபட்ச அளவாக இருந்தது. ஒவ்வொரு நாளும் மழையளவு கூடிக்கொண்டே போகிறது.

வாஷிங்டனின் முக்கிய அருங்காட்சியகங்கள், நினைவகங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மழைநீர் ஓடிக்கொண்டுள்ளது. இதன்விளைவாக, மிக முக்கிய இடமான வெள்ளை மாளிகையின் கீழ்தளத்திலும் நீர் கசிய தொடங்கிவிட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.