டோக்கியோ: இந்திய மகளிர் ஹாக்கி அணி அர்ஜென்டைனாவுடன் மோதிய அரையிறுதி போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்திய ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கி இருந்த இன்றைய போட்டி முடிவு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகள் கடந்த ஜூலை 23ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. உலக நாடுகளைச் சேர்ந்த  11,000 மேற்பட்ட வீராங்கனைகள், வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.  இந்தியா சார்பில் 127 வீரர் வீராங்கனைகள் 18 போட்டிகளில் கலந்துகொண்டு ஆடி வருகின்றனர்.

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நிறைவு பெற இன்னும் 4 தினங்களே உள்ளன. இதுவரை இந்தியா ஒரு வெள்ளி, இரு வெண்கலப் பதக்கம் மட்டுமே பெற்று பதக்கப்பட்டியலில் 68வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் பதக்கம் செல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்கள் ஹாக்கி அணி அரையிறுதியில் பெல்ஜியம் அணியிடம் தோல்வி அடைந்தது. வெண்கலப் பதக்கத்துக்கான வாய்ப்பும் இந்திய ஹாக்கி அணி வசம் உள்ளது.

இந்த நிலையில், இன்று பிற்பகல் நடைபெற்ற பெண்கள் ஹாக்கி அரையிறுதிப் போட்டியிலும் இந்திய பெண்கள் அணி தோல்வி அடைந்துள்ளது. இந்த ஆட்டத்துக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால், அரையிறுதியில் இந்திய மகளிர் அணி 1-2 என்ற கணக்கில் அர்ஜென்டினாவிடம் தோல்வியடைந்தது.

இதன் காரணமாக இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வெல்ல ஒரு வாய்ப்பு உள்ளது. இந்திய மகளிர்ஹாக்கி அணி அடுத்த 3வது இடத்துக்காக கிரேட் பிரிட்டனை எதிர்கொள்ள வேண்டும். அந்த போட்டியில் வெற்றி பெற்றால், இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகும்.