லண்டன்:
இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து இந்திய மகளிர் அணி அசத்தியுள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து மகளிர் அணியை எதிர்கொண்டது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் நேற்று களமிறங்கியது.
இங்கிலாந்து லார்ட்ஸ் மைதாத்தில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்தியா, 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, ஸ்மிரிதி மந்தனா 50 ரன்களும், தீப்தி ஷர்மா 68 ரன்களும் குவித்தனர்.
170 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி, தொடக்கம் முதலே நிலையான ஆட்டமின்றி தடுமாறியது. இறுதியில் 43.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. இந்திய வீராங்கனை ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளையும், ஜூலன் கோஸ்வாமி மற்றும் ராஜேஸ்வரி கெய்க்வாட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியை 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி கைப்பற்றியது. முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 88ரன்கள் வித்தியாசத்திலும், கடைசி ஒருநாள் போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணிஇங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது.