லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், அடித்து ஆடவேண்டிய தருணத்தில் மிகவும் மோசமாக செயல்பட்ட தோனி – ஜாதவ் இணையின் மீது கடும் விமர்சனங்கள் குவிந்து வந்தாலும், அவர்களுக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்துள்ளனர் கேப்டன் கோலியும், துணைக் கேப்டன் ரோகித்தும்.
ஆடுகளம் மெதுவாக மாறிவிட்டதென்றும், இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சூழலை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு சிறப்பாக செயல்பட்டதாலேயே தோனியால் அதிரடியாக ஆடமுடியவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தோனியின் ஆட்டம் சமீப காலங்களாகவே கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த உலகக்கோப்பையில் அவர் இதுவரை பெரிதாக மெச்சும் வகையில் ஆடவில்லை. இங்கிலாந்திற்கு எதிரானப் போட்டியில் கைவசம் 5 விக்கெட்கள் இருந்தும், தோனியும் கேதார் ஜாதவும் பெரிய ஷாட்களை ஆட முயலவில்லை.
இளம் வீரர்களான ரிஷப் பண்ட்டும், ஹர்திக் பாண்ட்யாவும் காட்டிய துடிப்பிலும் வேகத்திலும், பாதியைக்கூட தோனி – கேதார் இணை காட்டவில்லை. ஏதோ, பொழுதுபோக்கிற்காக ஆடுவதைப்போல் ஆடினார்கள்.
இந்த உலகக்கோப்பையில் ஒரு நல்ல ஃபினிஷர் என்ற பெயருக்கு தொடர்பில்லாமலேயே தோனியின் செயல்பாடுகள் இருக்கின்றன. ஆனாலும் அணியில் தோனியின் புராணம் மட்டும் ஓயவில்லை. ஆளாளுக்கு அவரைப் புகழ்வதை தங்களின் கடமையாக செய்து வருகின்றனர். ஒரு காலத்தில் டெண்டுல்கர் புராணம் இருந்ததைப்போன்று, இன்று தோனியின் புராணமும் புகழ்பெற்று விளங்குகிறது இந்திய அணியில்..!
ஆனால், இது ஒருபுறமிருக்க, தோனி வேண்டுமென்றேதான் அப்படி ஆடினார் என்றும், பாகிஸ்தான் அரையிறுதியில் நுழையக்கூடாது என்பதே அவரின் இலட்சியமாக இருந்தது என்றும், இது ஒரு திட்டமிட்ட செயல்பாடு என்பதாகவும் ஒரு தரப்பார் விமர்சித்து வருகின்றனர்.