மும்பை: உலக ஆண்கள் டேபிள் டென்னிஸ் அணிகளின் தரவரிசையில், இந்திய அணி முதன்முறையாக 10 இடங்களுக்குள் வந்து 9வது இடத்தைப் பிடித்து சாதித்துள்ளது.
இந்திய டேபிள் டென்னிஸ் வரலாற்றில் இது ஒரு முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
மொத்தம் 226 நாடுகளில் டேபிள் டென்னிஸ் விளையாடப்படுகிறது. இந்நிலையில், சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பாக தரவரிசைப் பட்டியல் வெளியானது. இப்பட்டியலில் 272 புள்ளிகள் பெற்று இந்திய அணி 9வது இடம் பெற்றது.
அடுத்த 2022ம் ஆண்டில் சீனாவில் நடைபெறும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடருக்கும் தகுதிபெற்றுள்ளது இந்திய அணி.
இப்பட்டியலில், 290 புள்ளிகளுடன் சீனா முதலிடத்திலும், 288 புள்ளிகளுடன் ஜப்பான் இரண்டாமிடத்திலும், 286 புள்ளிகளுடன் ஜெர்மன் 3ம் இடத்திலும் உள்ளன. தென்கொரியா, ஸ்வீடன், பிரேசில், சீனா தைபே போன்ற அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இந்த தரவரிசைப் பட்டியலைப் பார்க்கும்போது, உலகளவில் டேபிள் டென்னிஸ் போட்டியில், மங்கோலிய இனத்தைச் சேர்ந்த அணிகள்(கிழக்காசிய நாடுகள்) ஆதிக்கம் செலுத்துவது புலனாகிறது.