தொற்று நோய்க்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து புரிந்துகொள்ள தேவையான தகவல்களை மத்திய அரசு வழங்க மறுக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், கோவிட்-19 தொற்றுநோயின் தீவிரத்தன்மை மற்றும் அதன் உருமாற்றம் குறித்த தரவுகளை வெளியிடுமாறு இந்திய ஆராய்ச்சியாளர்கள் பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக்கொண்டனர்.
இந்தியாவில் தொற்று நோய் பரவல் நிர்வகிக்க முடியாத அளவுக்கு கட்டுக்கடங்காமல் செல்வதற்கு நோய் குறித்த தரவுகள் முறையாக சேகரிக்கப்படாததும் ஆராய்ச்சியாளர்களுக்கு அதை வழங்காமல் மறுப்பதுமே காரணம் என்று 200 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ ஆய்வாளர்கள் அடங்கிய குழு, மோடியிடம் ஆன்லைனில் முறையிட்டுள்ளனர்.
தற்சார்பு இந்தியா என்ற பெயரில் நேரத்தை வீணடிக்கும் மிகவும் கடினமான விதிமுறையால் மருத்துவ உபரகணங்கள் மற்றும் உலைகளை இறக்குமதி செய்வது தாமதமானது, இதனால், கொரோனா வைரஸ் மரபணுக்களை வரிசைப்படுத்தி கண்காணிக்கும் திறன் குறைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
“அரசின் ஆத்மநிர்பார் கொள்கை நம் நாட்டின் எதிர்காலத்தை ஊக்கப்படுத்த தேவையான ஒன்று என்ற போதும், இந்த நேரத்தில் இத்தகைய கட்டுப்பாடுகள் கோவிட் -19 ஐ கையாள்வதற்கான நமது திறனை மட்டுப்படுத்தவே உதவும், அதனால் கட்டுப்பாடுகளை திரும்பபெருங்கள்” என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
பரிசோதனை தரவுகளை முறையாக சேகரித்து அதை உரிய நேரத்தில் வெளியிடுவதன் மூலம் நோய் பரவல் குறித்து அறியவும் அனுமானிக்கவும் உதவும், மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட தரவுகள் சிகிச்சையை மேலும் மேம்படுத்த உதவும், தடுப்பூசியின் பலனாக ஏற்பட்ட நோயெதிர்ப்பு சக்தி குறித்த தரவுகள் தடுப்பூசியின் ஆற்றல் குறித்து அறிந்து கொள்ள உதவும்.
இந்தியாவில் இதுவரை 2.7 கோடிக்குக்கும் அதிகமானோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி முழுமையாக போடப்பட்டுள்ள நிலையில் இந்த தரவுகள் மூலம் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எத்தனை பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்ற விவரத்தை அறிந்து அதற்கேற்றார் போல செயல்பட உதவும் என்றும்,
தரவுகள் எதுவும் சேகரிக்கப் படாமல் இல்லை, மாறாக தரவுகளை யாருடைய பயன்பாட்டிற்கும் ஆய்வுக்கும் வழங்காமல் தவிர்த்துவருகிறது. அதனால் பிரதமர் உடனடியாக தலையிட்டு இந்த தரவுகளை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையின் மூத்த நுண்ணியலாளர் ககன்தீப் கங் உள்ளிட்ட நாட்டின் முக்கிய ஆராய்ச்சி நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் இருக்கும் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.