டெல்லி: ரயில்வே துறையில் கலாசி நடைமுறைக்கு இந்தியன் ரயில்வே முற்றுப்புள்ளி வைத்து உள்ளது.
இந்தியன் ரயில்வே துறையில், ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது கலாசி பணியிடம். இந்தபணியிடம் தற்போது ரயில்வேயில் குரூப் டி பிரிவின் கீழ் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள், யில்வே துறையில், மூத்த அதிகாரிகள் இல்லங்களில் அலுவலக உதவியாளா்களாக பணியமா்த்தப்பட்டு வந்தனர்.
ஆரம்ப காலங்களில் ரயில்வே துறையில் ரயில்வே துறையில் கலாசி அல்லது பங்களா பியூன் எனப்படும் பணியிடம் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இருக்கிறது. முந்தைய காலத்தில், தொலைதூர இடங்களில் பணியாற்றும் அதிகாரிகள், இரவு நேரங்களில் பணி நிமித்தம் செல்லும் சமயங்களில் அவர்களின் குடும்பத்தினர் பாதுகாப்புக்கும், தொலைபேசி வந்தால் பதிலளிப்பது, முக்கிய கோப்புகளை எடுத்து தருவது போன்ற அலுவலக பணிகளுக்காகவும் கலாசிகள் நியமிக்கப்பட்டனர்.
முதலில் தற்காலிக பணியாளா்களாக நியமிக்கப்படும் இவா்களுக்கு, எட்டாம் வகுப்பு தோ்ச்சி குறைந்தபட்ச கல்வித் தகுதியாக நிா்ணயிக்கப்பட்டது. மாத ஊதியம் ரூ. 20,000 முதல் ரூ.22,000 வரை வழங்கப்பட்டு வந்தது.
மூன்று ஆண்டுகள் பணிக் காலத்துக்குப் பிறகு குரூப்-டி பணியிடம் வரை இவா்கள் பதவி உயா்வு பெற முடியும். ஆனாலும், பெரும்பாலும் கலாசிகள், ரயில்வே அதிகாரிகள் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்துவதாக புகாா்கள் எழுந்தன. மேலும் இந்த ஊழியா்கள் மிக மோசமாக நடத்தப்படுவதாக வும் புகாா்கள் கூறப்பட்டது.
இந்தப் புகாா்களைத் தொடா்ந்து, இந்தப் பணியிட அவசியம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க இணைச் செயலா் அளவிலான 9 போ் குழுவை கடந்த 2014-இல் ரயில்வே அமைத்தது.
இந்தக் குழு தனது அறிக்கையை ஆய்வு செய்த ரயில்வே வாரியம், தற்போது அதிரடி அறிவிப்பை ஒன்றை பிறப்பித்துள்ளது. தற்போது, ‘கலாசி‘ பணியிட நியமன நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நடவடிக்கையை ரயில்வே மேற்கொண்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, இந்தப் பணியிட புதிய நியமனங்களை ரயில்வே நிறுத்தி வைப்பதாக அறிவித்து உள்ளது.
தொலைபேசி உதவியாளர் மற்றும் கலாசி நியமனம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எனவே, புதிதாக கலாசி நியமனம் மற்றும் மாற்று நபர் நியமிக்கப்படுவது உடனடியாக நிறுத்தி வைக்கப்படுகிறது. 2020, ஜூலை 1ம் தேதிக்குப்பின் கலாசி முறையில் நியமனம் நடந்திருந்தால், அது குறித்து மறுஆய்வு செய்யப்படும். இதை அனைத்து ரயில்வே மண்டலங்களும் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.