
டில்லி
அதிகம் கூட்டம் இல்லாத வழித்தடங்களில் ஓடும் சதாப்தி ரெயில் கட்டணங்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது.
இந்திய ரெயில்வே இயக்கும் சதாப்தி, ராஜ்தானி மற்றும் டுரண்டோ ரெயில்கள் மிகவும் வேகமாக செல்லக் கூடிய ரெயில்கள் ஆகும். இந்த ரெயில்களில் குறிப்பிட்ட வழித்தடங்களில் மிகவும் குறைந்த பயணிகளே பயணம் செய்கின்றனர். ஆகவே இந்த தடங்களில் பயணிகள் அதிக அளவில் பயணம் செய்ய சில முயற்சிகளை இந்திய ரெயில்வே உத்தேசித்துள்ளது.
இதையொட்டி பயணிகள் குறைவாக பயணிக்கும் தடங்களை ஆராய்ந்து சில சோதனைகளை ரெயில்வே நடத்தியது. சென்னை – மைசூரு தடத்திலும் டில்லி – ஆஜ்மீர் ஆகிய இரு ரெயில்களையும் சோதித்ததில் பெங்களூரு – மைசூரு மற்றும் ஜெய்ப்பூர் – ஆஜ்மீர் ஆகிய தடங்களில் குறைவான பயணிகள் பயணம் செய்வது கண்டறியப்பட்டது. இந்த இரு தடங்களிலும் கட்டணங்கள் குறைக்கப்பட்டு சோதிக்கப்பட்டது.
இவ்வாறு கட்டணம் குறைக்கப்பட்ட பின்பு இரு தடங்களிலும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உதாரணமாக ஜெய்ப்பூர் – ஆஜ்மீர் தடத்தில் பேருந்துக் கட்டணம் குறைவாக உள்ளதால் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க பேருந்துக் கட்டணத்துக்கு இணையாக ரெயில் கட்டணம் குறைக்கப்பட்டது. இதையொட்டி இந்த தடங்களில் வழக்கத்தை விட 63% பயணிகள் அதிகரித்துள்ளனர்.
இதனால் மற்றும் குறைவான பயணிகள் உள்ள சதாப்தி ரெயில் தடங்களிலும் கட்டணத்தை குறைக்க இந்திய ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிக அளவில் இந்த ரெயிலை உபயோகிப்பார்கள் என ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]