டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 12000 குதிரைத்திறன் கொண்ட மிகவும் சக்திவாய்ந்த இன்ஜினை ரயில்வே செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.
பீகாரில் மாதேபுரா மின்ரயில் என்ஜின் தயாரிப்புத் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட 12,000 குதிரைத்திறன் கொண்ட முதலாவது ரயில் இன்ஜினை ரயில்வே செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தது. பண்டிட் தீனதயாள் உபாத்யாய ரயில் நிலையத்தில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த என்ஜினுக்கு WAG12 என பெயரிடப்பட்டுள்ளது. 60027 என்ற எண்ணும் தரப்பட்டுள்ளது. கிழக்கு மத்திய ரயில்வேயின் தன்பாத் கோட்டத்தின் மிக நீண்ட ரயிலாக, 118 சரக்கு பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய ரயில் நிலையத்தில் இருந்து பர்வாடிஹ் ரயில் நிலையத்துக்குச் செல்கிறது.
இதன் மூலம், அதிக குதிரைசக்தித் திறன் கொண்ட ரயில் இன்ஜின்களை உள் நாட்டிலேயே தயாரிக்கும் 6வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. உலகில் அதிக குதிரைசக்தித் திறன் கொண்ட இன்ஜின் அகல ரயில் பாதையில் இயக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
முன்மாதிரி என்ஜின்கள் மார்ச் 2018 இல் வழங்கப்பட்டது. வடிவமைப்பு சிக்கல்களைக் கொண்ட சோதனை முடிவுகளின் அடிப்படையில், போகிகள் உள்ளிட்ட முழுமையாக மறு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
தன் மூலம் நாட்டில் 10,000 க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைகள் கிடைக்கும். இந்த திட்டத்தில் ஏற்கனவே ரூ .2000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது  என்றும் கூறப்பட்டுள்ளது.