டெல்லி: உள்ளூர் வியாபாரிகளுக்கு ரயில் பயணத்தில் பொருட்களை விற்கவும், பிளாட்பாரத்தில் கடை வைக்கவும் அனுமதி வழங்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்து உள்ளது.
மத்திய அரசின், ‘ஒரு நிலையம், ஒரு பொருள்’ திட்டத்தின்படி, ரயில்வே சார்பில், நாடு முழுதும் 5000 ரயில் நிலையங்களில் ‘ஒரு நிலையம் ஒரு பொருள்’ திட்டத்தின் கீழ், சிறு, குறு உற்பத்தியாளர்களின் தயாரிப்புகளை விற்பனைக்கு செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதுபோல, தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ஆறு கோட்டங்களில், அந்தந்த பகுதிகளில் பிரபலமாக இருக்கும் பொருட்களை தேர்வு செய்து, மார்ச் முதல் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரலில் – காஞ்சி பட்டுசேலை, மதுரை – சுங்குடி சேலை, திருநெல்வேலி – பனை பொருட்கள், தஞ்சாவூர் – பொம்மைகள், திருவனந்தபுரம் – கைவினை பொருட்கள் என, 11க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில், சிறு உற்பத்தியாளர்கள் கடைகள் அமைத்து, பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இது வணிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதுபோல ‘ஒரே நிலையம், ஒரே தயாரிப்பு’ திட்டத்தின்படி, உணவுப் பொருட்கள் முதல் கைவினைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் வரை பல்வேறு வகையான பொருட்களை ரயில் நிலையங்களில் விற்க அனுமதிக்கப்பட உள்ளனர்.
தற்போது, ஐஆர்சிடிசி அனுமதி பெற்ற வணிகர்கள் மட்டுமே ரயில் நிலையங்களில் கடை வைத்து வியாபாரம் செய்து வரும் நிலையில், இனிமேல் லோக்கல் வணிகர்களும் வியாபாரம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சிறு, குறு உள்ளூர் வியாபாரிகளும் 15 நாட்களுக்கு ரூ.1500 கட்டணம் செலுத்தி ரயில் நிலையங்களில் சிறு கடைகளை வைக்கலாம். அவர்களின் பொருட்களை வைக்க சிறப்பு வசதி கொண்ட சிறு கடைகள் ரயில்வே மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், சிறு வியாபாரிகள் ரயிலில் அதிகபட்சம் ஒரு ஸ்டேஷன் வரை பயணம் செய்து தங்கள் பொருட்களை விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்ட உள்ளது.