சிட்னி: இந்திய ஆன்மீக குரு ஆனந்த் கிரி, இரண்டு பெண்களைத் தாக்கிய குற்றத்திற்காக ஆஸ்திரேலிய நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக் ராஜ் நகரத்திலுள்ள பதே ஹனுமான் கோயிலில் குருவாக இருக்கிறார் இந்த ஆனந்த் கிரி. இவர் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சென்றிருந்தபோது இந்த சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூட்டி ஹில் பகுதியிலுள்ள ஒரு வீட்டிற்கு பிரார்த்தனைக்காக சென்றிருந்தபோது, 34 வயதுள்ள ஒரு பெண்ணைத் தாக்கினார் மற்றும் கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி 29 வயதுடைய ஒரு பெண்ணைத் தாக்கினார் என்று அவர் மேல் குற்றம் சுமத்தப்பட்டது.
இவர், சிட்னியின் புறநகர் பகுதியிலுள்ள ஆக்ஸ்லே பூங்காவில் வைத்து கைது செய்யப்பட்டார். சிட்னியின் பரமட்டா நீதிமன்றம் இவருக்கு பெயில் வழங்க மறுத்துவிட்டது. போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள இவர், ஜுன் 26ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.