டில்லி

னி கொரோனா வைரஸுடன் வாழ்க்கை நடத்த மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலர் லவ் அகர்வால் கூறி உள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு இரண்டாம் முறையாக ஊரடங்கை நீட்டித்துள்ளது.  ஆயினும் கொரோனா பரவும் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள மூன்றாம் கட்ட ஊரடங்கில் பல விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.   இதற்கு பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத் துறை இணை செயலர் லவ் அகர்வால்,”தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தின் வேகம் அதிகரித்துள்ளது  முன்பு   இரட்டிப்பாகும் கால கட்டம் 12 நாட்களாக இருந்தது.  தற்போது 10 நாட்களில் இரட்டிப்பாகிறது.  இதனால் நாட்டில் பல பகுதிகளில் வேகமாக கொரோனா பரவி வருகிறது.

இது நமக்கு விடுக்கப்பட்ட மிகப் பெரிய சவாலாகும்.நாம் கொரோனாவை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, வெளி மாநில தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அனுப்புவது குறித்து மட்டுமே கவலை கொண்டுள்ளோம்.  ஆனால் நமக்கு இருக்கும் மிகப் பெரிய சவால்கள் இவை மட்டும் அல்ல.

எல்லாவற்றுக்கு மேலாக மக்களுக்கு தற்போது உள்ள முக்கியமான சவால் கொரோனா வைரஸுடன் வாழ்க்கை நடத்தக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதாகும்.   மக்கள் அனைவரும் அதற்கான முயற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.  கொரோனாவில் இருந்து நம்மைக் காப்பாற்ற சமூகத்தில் ஒருங்கிணைந்த ஒரு கட்டுப்பாடு தேவையாகும்” எனத் தெரிவித்துள்ளார்.