லண்டன்: 
போரிஸ் ஜான்சனுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளதால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
லண்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் ராஜினாமா செய்வார் என்றும், அவரது பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதிபர் ரிஷி சுனக் வருவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு, மே மாதம் கொரோனா தொற்றின் முதல் அலையின் போது, பொது முடக்கம் அமலிலிருந்தது. லண்டன் டவுனிங் வீதியிலுள்ள தனது அலுவலகத் தோட்டத்தில் பொது முடக்கக் கட்டுப்பாட்டை மீறி நடந்த விருந்தில், பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்துகொண்டதாக, அவரின் முன்னாள் ஆலோசகர் அளித்த தகவல், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் செய்தியால் போரிஸ் ஜான்சன், அவரின் கன்சர்வேடிவ் கட்சியிலேயே எதிர்ப்புகளைச் சந்தித்துள்ளார்.
இந்த விவகாரம் நேற்று நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசப்பட்டபோது, எதிர்க்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர், “பிரதமர் மக்களுக்குத் துரோகம் செய்து, பல மாதங்களாக இதை மூடிமறைத்து தன்னைப் பாதுகாப்பதிலேயே குறியாக இருந்திருக்கிறார். அரசியல்வாதிகள் மட்டுமின்றி மக்களும் இதனால் அவர்மீது கோபம் கொண்டுள்ளனர். அவர் பதவி விலக வேண்டும்’ எனத் தெரிவித்தார். இது நாடாளுமன்றத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இது தொடர்பாகப் பதிலளித்துப் பேசிய போரிஸ் ஜான்சன், அது ஓர் அலுவலக வேலை நிகழ்வு என்று தான் நம்பிவிட்டதாகவும், அதனால்தான் அந்த விழாவில் தான் பங்கேற்றதாகவும் அவர் விளக்கமளித்தார். மேலும் இதற்குப் பொறுப் பேற்ற அவர், முதன்முதலாகத் தனது தவற்றை ஒப்புக்கொண்டு, அதற்காக மனதார பகிரங்க மன்னிப்புக் கேட்பதாகத் தெரிவித்தார்.
ஆனால் இதை ஏற்காத எதிர்க்கட்சியினர், போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் போரிஸ் ஜான்சனுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.