2022 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து சுமார் 20,000 இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர்.

இதில் மருத்துவ மாணவர்கள் தங்கள் படிப்பை தொடரமுடியாமல் தவித்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த வாரம் இந்தியா வந்த உக்ரைன் துணை வெளியுறவு அமைச்சர் எமின் ட்ஜபரோவா-வுடன் இது குறித்து விவாதிக்கப்பட்டது.

“இந்திய மருத்துவ மாணவர்களின் பிரச்சினையில், வெளிநாட்டு மருத்துவ மாணவர்களை அவர்கள் வசிக்கும் நாட்டில் இருந்தே ஒருங்கிணைந்த தகுதித் தேர்வில் பங்கேற்க உக்ரைன் அனுமதிக்கும் என்று அந்நாட்டு துணை வெளியுறவு அமைச்சர் எமின் ட்ஜபரோவா குறிப்பிட்டார்” என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) புதன்கிழமை அன்று தெரிவித்தது.

போர் காரணமாக நாடு திரும்பிய இந்திய மாணவர்களில் சுமார் 2000 பேர் மீண்டும் உக்ரைன் சென்று தங்கள் படிப்பைத் தொடர்ந்து வரும் நிலையில் அவர்கள் அனைவரும் அந்நாட்டின் மேற்கு பகுதியில் தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்னமும் இந்தியாவில் இருக்கும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் தங்கள் கல்வியைத் தொடரவும் மற்றும் இந்தியாவில் இருந்தே ஒருங்கிணைந்த மாநிலத் தகுதித் தேர்வு (USQE) எழுதலாம் என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.