மோடி அரசால் முற்றுகையிடப்படும் இந்திய ஊடகங்கள்!    எச்.பீர்முஹம்மது

ச்சு ஊடகங்களை பொறுத்தவரை ஒரு செய்தி கிடைக்கப்பெறும் சூழல் பெரும்பாலும் அதன் உண்மைத்தன்மை ஆராய்ந்து  பிரசுரிக்கப்படும். அதாவது களத்தில் இருந்து செய்தியாளர்கள் சேகரித்து அனுப்பும் செய்திகள், சம்ப வங்கள், அரசின் மீதான கவன ஈர்ப்புகள், மக்கள் போராட்டங்கள் ஆகியவை அதன் அசல் தன்மையோடு அச்சில் இடம் பெறும். இது அடுத்த நாள் காலையில் ஒரு கப் தேநீர் உடன் இருக்கையில் உட்கார்ந்து தினசரி வாசிக்கும் ஆர்வத்தை வாசகர்களுக்கு தூண்டக்கூடியதாக இருந்தது. இதன் தாக்கம் செய்திகள் மீதான ஆர்வத்தை பேரார்வமாக மாற்றியது. தமிழ்நாட்டைப்பொறுத்தவரை தினமணியும், தினமலரும் இவ்வகையான வாசகர்களின் இடத்தை நிரப்பக்கூடிய ஒன்றாக இருந்தன. குறிப்பாக தினமணியின் தலையங்கமும், நடுப்பக்க கட்டுரையும் வாசகர்களின் ஆர்வத்தை அதிகம் தூண்டிய ஒன்றாக இருந்தன. இந்நிலையில் தான் நாம் தொலைக்காட்சிகள் ஏற்படுத்தும் தாக்கத்தை காண வேண்டியதிருக்கிறது.

தமிழ்நாட்டில் தொலைக்காட்சிகளை பொறுத்தவரை கேபிள் கட்டுப்பாடு என்பது நீண்டகாலமாக சன் குழுமத்திடமே இருந்தது. அதன் காரணமாக தமிழில் எந்த செய்தித்தொலைக்காட்சி சேனல்களும் வரவில்லை. செய்திகளையும், அதன் காட்சி கோணங்களையும் தீர்மானிப்பதாக சன் டிவி இருந்தது. இதனால் 2009 ல் தமிழ்நாட்டில் நடைபெற்ற ஈழப்போராட்டம் பெரிய அளவில் காட்சிப்படுத்தப்படவில்லை. இது சார்ந்த மாணவர் போராட்டங்கள் கூட இருட்டடிப்பு செய்யப்பட்டது.

மக்கள் தொலைக்காட்சி அதனை ஒளிபரப்பிய போது அதன் கேபிள் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் 2011 ல் அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன்  கேபிளை அரசுடமையாக்கியது. இதன் காரணமாக புதிய தலைமுறை, தந்தி டிவி, சத்தியம், பாலிமர், நியூஸ் 7 , நியூஸ் 18 போன்ற செய்தித்தொலைக்காட்சி சேனல்கள் உருவாயின. குறிப்பாக புதிய தலைமுறை தொடக்கத்தில் ஏற்படுத்திய தாக்கம் தமிழ்நாட்டில் அதுவரையிலான செய்தி ஒளிபரப்பு முறையை தலைகீழாக புரட்டிப்போட்டது. முதன் முதலாக செய்திகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன. நேர்பட பேசு விவாத அரங்கம், செய்தி விமர்சனம் போன்ற பலவகையான செய்தி முறைகள் ஏற்பட்டன. மதுரையை மையமாக வைத்த கிரானைட் ஊழல் விவகாரத்தில் சகாயம் அறிக்கையை புதிய தலைமுறை ஒளிபரப்பியது அரச மட்டத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதன் தாக்கமாக சில சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தியாவில் அல்லது தமிழ்நாட்டில் செய்தி சேனல்கள் பெருகினாலும் அவை இன்னமும் அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் அரசு கேபிள் நிறுவனம் செய்திச்சேனல்கள் மீது செலுத்தும் தாக்கம் அதன் உள்ளடக்கத்தை தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக அரசிற்கு எதிரான செய்திகள் எதுவும் வெளிவராமல் பார்த்துக்கொள்கின்றன.

இதன் தொடர்ச்சியில் 2015 டிசம்பர் சென்னை வெள்ளப்பாதிப்புகள் குறித்த செய்திகளை தொலைக்காட்சிகள் காட்டத்தயங்கின. குறிப்பாக வெள்ள நிவாரண பொருட்கள் மீது அதிமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டிய விவகாரத்தை எந்த முன்னணி செய்திச்சேனல்களும் காட்டவில்லை. (சன் டிவி தவிர) காரணம் ஜெயலலிதா அரசாங்கம் மீதான பயம். அவ்வாறு ஒளிபரப்பினால் தங்கள் சேனல்களின் கேபிள் இணைப்பு துண்டிக்கப்படலாம் என்ற அச்ச உணர்வு. இதனை தொலைக்காட்சி செய்தியாளர்கள் சென்னையில் களத்தில் இருந்த ஆங்கில சேனல்களின் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். அந்த சம்பவத்தை வாட்ஸ் அப் தான் முதன் முதலாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. சில புலனாய்வு அச்சு இதழ்களும் இந்த செய்திகளை வெளியிட்டன. இந்நிலையில் காட்சி ஊடகங்கள் சார்ந்த அரசியலை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று அரசியல் வாதிகள் சார்ந்த காட்சி ஊடகம். இரண்டு கார்ப்பரேட் சார்ந்த காட்சி ஊடகம். இதில் முதலாம் வகையிலான காட்சி ஊடகம் என்பது ஆரம்ப கால காட்சி ஊடகங்கள். குறிப்பாக என்.டி டிவியானது காங்கிரஸ் சார்பானவர்களின் சானல். தமிழ்நாட்டின் ஜெயா, சன், கலைஞர் போன்றவை சசிகலா அதிமுக, திமுக சார்பான காட்சி ஊடகங்கள். இப்படியாக இந்தியா முழுக்க பல சானல்கள் இருக்கின்றன.

அந்த சானல்கள் எல்லாம் அவற்றின் அரசியல் நலன்களுக்கு சார்பான செய்திகளை மட்டுமே ஒளிபரப்பும். பிறவற்றை  இருட்டடிப்பு செய்யும்.  இதன் நீட்சியில் காட்சி ஊடகங்களை கார்ப்பரேட்டுகள் கபளீகரம் செய்யும் போக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஐ.பி.என்,சி.என்.என் தொலைக்காட்சி நிறுவனங்களை ரிலையன்ஸ் வாங்கியது காட்சி ஊடக வரலாற்றில் மிக முக்கிய துயரம். இதன் காரணமாக அதிகமும் கார்ப்பரேட் நலன்கள் சார்ந்த செய்திகளை மட்டுமே அந்த தொலைக்காட்சிகளில் எதிர்பார்க்க முடியும். மேலும் மத்திய அரசிற்கும் ஜிங்கா அடிக்கும் சானல்களாகவே அவை இருக்கும். மோடி அரசு பதவியேற்ற மூன்று ஆண்டுகளில் எல்லா ஊடகங்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மிரட்டப்பட்டிருக்கின்றன.

அதன் மிரட்டலுக்கு ஒத்து வராத ஊடகங்கள் மீது ரெய்டு நடக்கும். என்.டி. டிவி மீதான சமீபத்திய ரெய்டுகள் இதற்கு ஓர் உதாரணம். மேலும் காட்சி ஊடகங்களின் வரவிற்கு பிறகு கட்டண செய்திகள் ( Paid News) பிரபலமாகி இருக்கின்றன. இவை தேர்தல் நேரத்தில் தான் அதிகமும் நிகழ்கின்றன. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்த கட்டண செய்திகள் தான் இந்திய ஊடகங்களை ஆக்கிரமித்து மோடியை வெற்றி பெறச் செய்த ஒன்றாக இருந்தன. அது விரும்பும் பிம்பங்களை ஊதி பெருக்குவதற்கும், விரும்பாதவற்றை விரல்களால் சுருக்குவதற்கும் செய்தி பண்டம் முக்கிய காரணியாக இருக்கிறது. சமீபத்திய உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலிலும் இவை எதிரொலித்தன.

மோடி அரசில் ஊடக சுதந்திரம் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. சர்வதேச அளவில் இந்தியா ஊடக சுதந்திரத்தில் 136 ம் இடத்தில் இருப்பதாக ஊடக புள்ளி விபரம் வெளிப்படுத்துகிறது. இதன் காரணமாக அதன் ஊழல்கள் எதுவும் வெளிவருவதில்லை. வெளிக்கொணர ஊடகங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அது சம்பந்தமான விவாதங்கள் கூட மேலிட தாக்கத்தால்  கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படும். புதிய தலைமுறை கூட அப்படி பல முறை ரத்து செய்திருக்கிறது. அமித்ஷா மகன் மீதான சொத்துக்குவிப்பு செய்தியை வெளியிட்ட தி வயர் இணையதளம் கடும் மிரட்டலுக்குள்ளாகியது.

அதானியின் ஊழலை வெளிப்படுத்திய  The Economic and Political Weekly  வார இதழும் நெருக்கடிக்குள்ளாகியது. அச்சு ஊடகங்களின் காலத்தில் நிர்வாகத்திற்கும், ஆசிரியர்களுக்கும் சீனப்பெருஞ்சுவர் ஒன்று இருந்தது. பத்திரிகை உள்ளடக்கம் என்பது அது வெளியான பிறகு தான் நிர்வாகத்திற்கே தெரிய வரும். செய்திகளின் உள்ளடக்கம் அதன் பக்கங்கள் முழுமையையும் ஆசிரியரும், ஆசிரிய குழுவினரும் சுதந்திரமாக தீர்மானித்தார்கள். ஆனால் காட்சி ஊடகங்களின் வருகை இதை தலைகீழாக மாற்றியது.

இங்கு செய்தி ஒளிபரப்பை நிர்வாகம் தான் தீர்மானித்தது. கேமராக்களின் ரிமோட் கண்ட்ரோல் முதலாளிகளிடம் இருந்தது. அது எந்த கோணத்தில் திரும்ப வேண்டும் என்பதை ஊடக ஆசிரியரை விட முதலாளிகளே தீர்மானிக்கிறார்கள். மீறும் ஆசிரியர்கள் வெளியேற நிர்பந்திக்கப்படுகிறார்கள். காட்சி ஊடகங்களில் கார்ப்பரேட் ஊடுருவி இருப்பதால் அதன் உள்ளடக்கத்தில் பெரும்பாலானவை கார்ப்பரேட் சொற்களே. இது மோடி போன்ற பெருமுதலாளித்துவ, வகுப்புவாத அரசிற்கு சாதகமாக ஒளியாடுகிறது. விளைவு வெகுஜன உளவியலில் மோடி இன்னமும் கதாநாயகனாகவே இருக்கிறார்.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாகிய ஊடகங்கள் இப்படி சரிந்திருப்பது இந்திய ஜனநாயகம் பேரழிவை நோக்கி செல்வதற்கான அறிகுறி.  இது மாறுவதற்கு நாம் நாட்களை எண்ணிக்கொண்டு தான் இருக்க வேண்டியதிருக்கிறது. இந்திய ஊடகங்களின் மீட்டுருவாக்கம் மட்டுமே ஜனநாயகத்தை உயிர்ப்பிக்கும் வல்லமை கொண்டது என்பது உண்மை.

(முற்றும்)

mohammed.peer1@gmail.com

பகுதி-1

மோடி அரசால் முற்றுகையிடப்படும் இந்திய ஊடகங்கள்! பகுதி-1