டில்லி
சவுதி அரேபியா செல்பவர்கள் தங்கள் மொபைல் மற்றும் லாப்டாப்பில் சவுதி அரேபிவில், தடை செய்வோம் என அறிவிப்பு செய்துள்ள வகையில் உள்ள வீடியோக்கள், மற்றும் படங்களை அழித்து விட்டு செல்லுமாறு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் வேலைபார்ப்போர் அதிகமாக இருப்பது சவுதி அரேபியாவில் தான். சவுதியில் சுமார் 30 லட்சம் இந்தியர்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சவுதியின் சட்டதிட்டங்கள் கடுமையானவை. அதனால் இந்திய அரசு சவுதி செல்வோருக்கு எது எதை செய்யலாம், எது எதை செய்யக்கூடாது என ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது :
”சவுதியில் தடை செய்யப்பட்ட எதையும் இங்கிருந்து எடுத்துச் செல்ல வேண்டாம். உங்கள் மொபைலில் ஏதும் தடை செய்யப்பட்ட அல்லது தவறான படங்கள் மற்றும் வீடியோக்கள் இருக்கக்கூடாது. உடனடியாக அதனை அழித்து விடுங்கள். கண்டுபிடிக்கப்பட்டால் கிடைக்கும் தண்டனைகள் கடுமையானவை என்பதை நினைவில் கொள்ளவும்.
மதச் சம்பந்தப்பட்ட பொருட்கள், பில்லி, சூனியம், ஏவல் சம்மந்தப்பட்ட பொருட்கள் சவுதியில் தடை செய்யப்பட்டுள்ளது. தாயத்து, கருப்புக் கயிறு ஆகியவைகள் எடுத்துச் செல்லக் கூடாது. மீறினால் அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கவும் சவுதியின் சட்டத்தில் இடமுண்டு.
போதை மருந்துகள், பன்றி இறைச்சி, கசகசா விதைகள், பிரிஞ்சி இலை, பான் மசாலா, இஸ்லாம் தவிர மற்ற மதம் சம்மந்தப்பட்ட புத்தகங்கள் ஆகியவைகளும் தடை செய்யப்பட்டுள்ளதால் கொண்டு செல்லக் கூடாது.
இந்தியாவை விட்டு கிளம்பும் முன் அங்குள்ள சட்டதிட்டங்கள் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும். அதனால் அனைத்து நிறுவனங்களும் இந்த சட்டங்களை ஆங்கிலம் மற்றும் அரபியில் பணி புரிய வருவோர்க்கு அனுப்பவேண்டும் என சவுதி அரசு ஆணையிட்டுள்ளது.
சவுதி அரசு பணி புரிய வரும் அனைவருக்கும் இலவச சிம் கார்டு அளிக்கிறது. ஆகையால் வெறும் மொபைல் மட்டும் இங்கிருந்து எடுத்துச் சென்றால் போதுமானது”.
மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் அறிவுறுத்த்ப்பட்டுள்ளது.