சென்னை: பாகிஸ்தான் மீது இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டக் கூடாது என்றும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளை மீட்பதன் மூலம் மட்டுமே இந்திய மக்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பு கிடைக்கும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறி உள்ளார்.

பாகிஸ்தான்மீது தாக்குதல் நடத்தக்கூடாது என விசிக தலைவர் திருமா கூறி வரும் நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சில கேள்விகளை எழுப்பி இருப்பதுடன், பாஸ்தான்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் , காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலை 140 கோடி இந்தியா்கள் மீது நடத்தப்பட்ட யுத்தமாகத்தான் கருத வேண்டும். அதற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான இந்திய மக்களின் எதிா்பாா்ப்பாகவும் உள்ளது.
10 தீவிரவாதிகளின் தீய நடவடிக்கைக்காக ஒரு நாட்டை எப்படித் தண்டிப்பது என்று சிலா் கேள்வி எழுப்புகிறாா்கள்?
தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கக்கூடிய நாடு எது? எந்த எல்லை?
உலகினுடைய வேறு எந்த நாட்டிலிருந்து இதுபோல தீவிரவாதிகள் அடிக்கடி ஒரு தேசத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனா்?
அது பாகிஸ்தானிலிருந்து மட்டும்தான் நடக்கிறது.
எனவே, பாகிஸ்தான் மீது இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டக் கூடாது. அதேபோல், பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கக்கூடிய காஷ்மீா் பகுதிகளை இந்தியா மீட்டு எடுப்பதன் மூலம்தான் இங்குள்ள மக்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பு கிடைக்கும்.
இவ்வாறு கூறி உள்ளார்.
முன்னதாக, “பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் துணை போகுமேயானால் அதை உலகளவில் அம்பலப்படுத்த வேண்டும். அவர்களை அந்நியபடுத்த வேண்டுமே தவிர யுத்தம் தேவையில்லாதது” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். அவரது பேச்சு கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், மற்றொரு தலித் இயக்க தலைவரான புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கக்கூடிய நாடான பாகிஸ்தான்மீது கடும் தாக்குதல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.