புதுடெல்லி :

வேளாண் விளை பொருட்களை மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலைக்கு (எம்.எஸ்.பி) குறைவாக கொள்முதல் செய்ததால் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் விவசாயிகளுக்கு 1900 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது  தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்து, ‘தி வயர்’ செய்தி நிறுவனம் நடத்திய  புள்ளிவிவர ஆய்வில் இந்த உண்மை தெரியவந்திருக்கிறது.

அஃமார்க்நெட் எனும் வேளாண் பொருள் பற்றிய தரவுகளை மேலாண்மை செய்யும் அரசு நிறுவன தகவலின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதார விலையாக (எம்.எஸ்.பி) அரசு நிர்ணயித்த விலையுடன் நாட்டில் உள்ள சுமார் 3000 மண்டிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட விலையை ஒப்பீடு செய்து பார்த்ததில், உத்தேச மதப்பீடாக 1881 கோடி ரூபாய் அளவிற்கு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

பெரும்பாலான மாநிலங்களில், பெரும்பாலான பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை விட சராசரியாக குறைவான விலையே கிடைத்தது

பயிர்  மாநிலம்  எம்எஸ்பி  அக்டோபரில் சராசரி விலை (ஒரு குவிண்டால் ரூ.)  நவம்பரில் சராசரி விலை (குவிண்டால் ஒன்றுக்கு ரூ.)
துவரை மத்தியப் பிரதேசம் 6,000 4,536 5,100
கம்பு கர்நாடகா 2,150 1,192 1,245
கம்பு உ.பி. 2,150 1,271 1,351
பருத்தி மகாராஷ்டிரா 5,515 4,504 5,481
நிலக்கடலை உத்தரபிரதேசம் 5,275 4,043 4,047
நிலக்கடலை கர்நாடகா 5,275 3,978 4,257
வெள்ளை சோளம் மத்தியப் பிரதேசம் 2,620 1,164 1,764
வெள்ளை சோளம் ராஜஸ்தான் 2,620 1,632 1,708
மக்காசோளம் சத்தீஸ்கர் 1,850 1,102 1,298
மக்காசோளம் தெலுங்கானா 1,850 1,117 1,598
பாசிப்பயிறு கர்நாடகா 7,196 6,119 5,911
நெல் உ.பி. 1,868 1,558 1,765
நெல் சத்தீஸ்கர் 1,868 1,574 1,558
ராகி கர்நாடகா 3,295 2,259 2,320
சோயாபீன் தெலுங்கானா 3,880 3,322 4,010

நடப்பு 2020-21 அறுவடை சீசனில், குறிப்பிட்ட சில பயிர்களுக்கு மத்திய அரசு குறைந்த பட்ச ஆதார விலையை ஏற்கெனவே நிர்ணயம் செய்துள்ளது. இதன்படி, ஒரு குவின்டால் கம்புக்கு ₹2,150, நிலக்கடலை ₹5,275, சோளம் ₹1,850, வெள்ளை சோளம் ₹2,620, பாசிப்பருப்பு ₹7,196, நெல் ₹1,868, கேழ்வரகு ₹3,295, எள் ₹6,855, சோயாபீன் ₹3,880, துவரம் பருப்பு ₹6,000 மற்றும் உளுந்து ₹6,000 என நிர்ணயித்துள்ளது.

இதில், சோளப்பயிர் கொள்முதல் செய்ததில் குறிப்பிட்டு சொல்லும்படியாக ரூ. 485 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.  குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1,100 முதல் ரூ. 1,550 வரை மட்டுமே விலை போன நிலையில், அரசு நிர்ணயித்த ரூ. 1,850 துடன் ஒப்பிடும் போது அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரு மாதங்களில் மட்டும் இந்த இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

இதேபோல், நிலக்கடலை கொள்முதலில் உத்தேசமாக ரூ. 333 கோடியை இழந்துள்ளனர்.

2020 ம் ஆண்டு கரீப் பருவ (ஜூலை – அக்டோபர்) வேளாண்மையில் நிகர இழப்பு

பயிர்  அக்டோபர் மாதத்தில் உத்தேச இழப்பு (ரூ. கோடியில்)  நவம்பரில் உத்தேச இழப்பு (ரூ. கோடியில்)
அனைத்து பயிர்கள் 1,099 793
மக்காசோளம் 228 257
சோயாபீன் 212 1
நிலக்கடலை 165 168
பருத்தி 145 81
நெல் 101 129
கம்பு 100 83
பாசிப்பயிறு 80 38
வெள்ளை சோளம் 35 30

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களை தவிர நெல் சாகுபடி செய்யும் முக்கிய மாநிலங்களில் நெல்லுக்கான ஆதார விலையில் இருந்து குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டதால் தோராயமாக ரூ. 220 கோடி இழப்பை சந்தித்திருக்கிறார்கள்.

தெலுங்கானா, சட்டிஸ்கர் மற்றும் உத்தர பிரதேச உள்ளிட்ட பிற நெல் விளையும் மாநிலங்களில் ஆதார விலையில் இருந்து சராசரியாக 15 சதவீதம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அஃமார்க்நெட் பதிவுகளில், மாநில அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் வேளாண் பொருட்கள் வாரியாக எவ்வளவு கொள்முதல் செய்யப்பட்டது என்ற புள்ளிவிவரங்களை கொண்டு, மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் சராசரியாக வழங்கப்பட்ட விலை குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டது.

ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்ட சராசரி விலையுடன் அரசு நிர்ணயித்த ஆதார விலையுடன் ஒப்பிட்டு கிடைத்த வித்தியாச தொகையை அந்த மாதம் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களின் எடையை கொண்டு கணக்கிட்டதன் அடிப்படையில், இந்த உத்தேச இழப்பு கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த இழப்பீடு, அஃமார்க்நெட் பதிவுகளில் உள்ள தகவல்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது, இந்த பதிவுகளில் மண்டிகளில் கொள்முதல் செய்யப்படும் பொருட்களை பற்றிய விவரங்கள் மட்டுமே உள்ளது. மண்டிகளுக்கு வெளியே, வெளி சந்தையில் விற்கப்படும் பொருட்களை பற்றிய தகவல்கள் இதில் இல்லை.

பெருமளவிலான பொருட்கள் வெளிச்சந்தையில் விற்கப்படும் நிலையில், விவசாயியை தேடி வியாபாரிகள் சென்று கொள்முதல் செய்ய ஆகும் இதர செலவுகளை கணக்கிடும் போது, வெளி சந்தையில் இதை விட குறைந்த விலை தான் வழங்கப்பட்டிருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், எம்.எஸ்.பி. யை சட்டபூர்வ உரிமையாக மாற்ற வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது.

23 பயிர்களுக்கு எம்.எஸ்.பி நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இவற்றில் பெரும்பாலானவை எம்.எஸ்.பி.யை விட மிகக் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது.

பொதுவாக, நெல் மற்றும் கோதுமை ஆகிய இரண்டு பயிர்களுக்கு, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில், எம்.எஸ்.பி அல்லது அதற்கு மேல் விலை கிடைக்கிறது.

புதிய வேளாண் சட்டங்களால் குறைந்த பட்ச ஆதார விலை  காலப்போக்கில் மறைந்து விடும்  என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும், இவ்விரு பயிர்களும் எம்.எஸ்.பி.க்கு குறைவாக விலை கிடைக்கும் பட்சத்தில், இவ்விரு மாநில விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள்.

மக்காச்சோளம், சோயாபீன், நிலக்கடலை, பாசிப்பயிறு, கம்பு, பருத்தி, வெள்ளை சோளம், ராகி மற்றும் நெல் ஆகியவற்றுக்கான விலை, நிர்ணயிக்கப்பட்ட எம்.எஸ்.பி.யை விட குறைவாக இருந்ததால். கடந்த இரண்டு மாதங்களில், மாநில அளவில்,  கர்நாடகாவில் நிகர மொத்த இழப்பு ரூ. 403 கோடியாக இருந்தது.

மக்காச்சோள உற்பத்தியில் கர்நாடகா முக்கிய பங்கு வகிக்கிறது, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டில் அதிக மக்காசோளம் இங்கு உற்பத்தி செய்யப்பட்டது.

இதன் காரணமாக, அக்டோபர் மாதம் 21 சதவீத எம்எஸ்பி விலைக்கு கீழும், நவம்பரில் 16 சதவீதம் குறைவாகவும்  இருந்ததால், மக்காசோள விவசாயிகள் ரூ. 130 கோடி இழப்பை சந்தித்தனர்.

இதேபோல், இந்த மாநிலத்தில் உள்ள சோயாபீன் விவசாயிகளும் 82 கோடி ரூபாய் இழப்பை சந்திக்க நேரிட்டது.

மத்திய பிரதேசத்தில், மக்காச்சோளம், பருத்தி, சோயாபீன், துவரம் பருப்பு, வெள்ளை சோளம் மற்றும் நிலக்கடலை ஆகியவற்றின் சராசரி  விலை எம்.எஸ்.பி. விலையை விட குறைவாக இருந்தது.

கோழிப்பண்ணை நலிவுற்றதை தொடர்ந்து நாடு முழுவதும் இந்த ஆண்டு மக்காசோளத்தின் விலை பெருமளவு வீழ்ச்சி கண்டது, அக்டோபர் மாதம் எம்.எஸ்.பி.யை விட 39 சதவீதம் குறைவாகவும், நவம்பர் மாதம் 29 சதம் குறைவாகவும் இருந்தது.

குஜராத்தில் விவசாயிகள் நிலக்கடலை மற்றும் பருத்தியில் தலா ரூ. 100 கோடிக்கு மேல் இந்த இரண்டு மாதங்களில் இழப்பை கண்டனர்.

இவ்விரு மாதங்களில் நெல் மற்றும் கோதுமை கொள்முதல் காரணமாக பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் மட்டுமே நிகர லாபமீட்டியது, இருப்பினும், இந்த மாநிலங்களில் பருத்தி மற்றும் மக்காசோளம் பயிரிடும் விவசாயிகள்  எம்.எஸ்.பி.யை விட குறைந்த விலைக்கே விற்பனை செய்ய நேரிட்டது.

எம்.எஸ்.பி. எனும் குறைந்தபட்ச ஆதார விலை மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்படும் போதே விவசாயிகள் பெருமளவு இழப்பை சந்திக்கும்  தற்போதைய சூழ்நிலையில், புதிய வேளாண் சட்டம் மூலம் குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும் வழக்கம் கைவிடப்பட்டால், விவசாயிகள் மேலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பெரு நிறுவனங்கள் இந்த வேளாண் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் நிலை ஏற்படும் என்ற அச்ச உணர்வும் விவசாயிகளிடையே உள்ளது.

– நன்றி – தி வயர்