வாஷிங்டன்

ந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பொருளாதாரம் கடுமையாக பாதிப்படையும் எனச் சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் அமைப்பின் புதிய பெண் நிர்வாக இயக்குநரான கிறிஸ்டாலினா ஜார்ஜிவா உலக நாடுகளின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளார்.  இந்த ஆய்வை சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி இணைந்து நடத்தி உள்ளது.    இதில் பல நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் உலகின் பல மத்திய வங்கிகள் கலந்துக் கொண்டுள்ளனர்.  தற்போது இந்த ஆய்வு குறித்த அறிக்கையை ஜார்ஜிவா வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை வெளியீட்டின் போது ஜார்ஜிவா தனது உரையில், “இந்த 2019 ஆம் வருடம் உலகின் 90% நாடுகளில் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்நாடுகளில் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளது.   தற்போதுள்ள நிலையில் உலகப் பொருளாதாரம் மிகவும் குழப்பமான நிலையில் உள்ளது.

இதனால் அமெரிக்கா, ஜப்பான், மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வர்த்தக ஓரளவு வளர்ச்சி அடையக்கூடும்.   அதே வேளையில் இந்தியா, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளில் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்படும்.  இதனால் இந்த நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி அதிகமாக ஏற்படும்.   ஏற்கனவே இந்நாடுகளில் பொருளாதார வீழ்ச்சிகள் அதிகமாக உள்ளதால் இந்நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தகப் போர் ஆகும்.  இதனால் உலகப் பொருளாதாரம் கடுமையாக ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது  இதைத் தவிர ஐரோப்பிய நாடுகள் கூட்டணியில் இருந்து இங்கிலாந்து விலகுவது இந்த பாதிப்பை அதிகமாக்கி உள்ளது.     இதனால் உலகெங்கும் வர்த்தக வளர்ச்சி நின்று விடும் நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த பொருளாதார வீழ்ச்சி 2020 ஆம் வருடம் சற்றே முன்னேறினாலும் தற்போதைய சூழ்நிலைகளின் பாதிப்பு வர்த்தகத் துறையில் கடும் பாதிப்பை உண்டாக்கும்.  இதைச் சரி செய்ய உலகெங்கும் உள்ள பொருளாதார மேதைகள் ஒன்றிணைந்து பல திட்டங்கள் தீட்ட வேண்டும்.  அனைவரும் இணைந்து செயல்பட்டால் ஒரு நல்ல முடிவை எடுக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.