நெட்டிசன்:

களந்தை பீர் முகம்மது அவர்களின் முகநூல் பதிவு:

ந்திய ஜனநாயகம் பழுதுபட்டிருப்பதாக ‘எக்கனாமிஸ்ட் இன்டெலிஜென்ட் யூனிட்’ என்ற பிரிட்டனின் அமைப்பு கூறுகிறது.

ஜனநாயகம் சிறந்துவிளங்கும் நாடுகள் என்று அது ஆண்டு தோறும் பட்டியலை வெளியிடுகின்றது. இந்த அடிப்படை யில் சென்ற ஆண்டு 32வது இடத்தில் இருந்தது இந்தியா. இப்போது அது 42வது இடத்துக்கு விரட்டப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் என்னவென்று நாம் ரொம்பவும் அறிவோம். சட்டென்று தென்படும் இந்த மதவாத ஓலங்களே இந்தியா பின்னடைந்து சென்றுகொண்டி ருப்பதற்கான காரணம் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. ஃபாஸிஸ அமைப்புகளெல்லாம் தத்தம் கைகளில் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு பட்டப்பகலில் நடுத்தெருவில் படுகொலைகள் புரிவது, அனைத்துப் பிரச்சினைகளையும் மதவாத நோக்கில் மட்டுமே அணுகிச் செல்வது, ஜனநாயகம் திட்டமிட்டு நசுக்கப்படுவதாக ஜனநாயக சக்திகள் தொடர்ந்து கூறிக்கொண்டிருப்பது….எனப் பல காரணங்கள் அடுக்கப்படுகின்றன.

இந்தியாவில் ஊடகங்களின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவதை இந்த அமைப்பு அம்பலப்படுத்திவிட்டது. ஊடக உரிமையில் இந்திய இராணுவமும் பேரளவில் ஈடுபடுவதாக எகானமிஸ்ட் இன்டெலிஜென்ட் குற்றம் சாட்டுகிறது. இதனால் இந்தியா பலவீனமான நிலையில் இருக்கிறது.

அண்மைக் காலங்களில், குறிப்பாக காஷ்மீரில் இந்திய இராணுவத் தளபதி பல்வேறுவிதமாகக் குறுக்கீடு செய்வதும் அமைச்சர்களைப் போல வெறுக்கத்தகுந்த கருத்துகளைக் கூறிவருவதும் வெளிப்படையாக நடக்கிறது. இன்னும் ஓரடி முன்னே சென்று அரசுக்குப் புத்திமதி கூறும் அளவுக்கும் அவர் நடந்துகொள்கிறார். இந்நிலையில் காஷ்மீர் சமூகம், இந்தியர்களின் மனத்தில் மேலும் மேலும் அவப்பெயரைச் சம்பாதித்துவருகிறது. இராணுவத்தின் இப்போக்கினை எடுத்துரைத்துக் கண்டிப்பார் எவருமில்லாத நிலையில் இவ்வாறான செய்தி வெளியுலகத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தப்பட்டியல் பகிரப்படும் அதே தருணத்தில் இராஜஸ்தானில் பா.ஜ.க. கடுமையான முறையில் அடி வாங்கி யிருக்கின்றது. மூன்று இடைத்தேர்தல்களிலும் அது தன் தொகுதிகளையும் அதீதமான வாக்குகளையும் காங்கிர ஸிடம் இழந்து கையறுநிலையில் புலம்பிக்கொண்டிருக்கிறது. நீண்ட நாட்களுக்கு மதவாதத்தைக் கொம்புசீவிக் கொண்டிருக்க முடியாதல்லவா? ஃபாஸிஸ அரசியல் மக்களின் வாழ்க்கையை உரசும்போது உண்டாகும் நெருப்புப்பொறி அதே ஃபாஸிஸ்டுகளைத் தீய்க்கும்போது மீண்டும் ஜனநாயகம் உயிர்த்தெழும்.

ஒன்று தெரிகிறது, நாம் கடுமையாக உழைத்தால் பாஜகவைப் பலவீனப்படுத்தி மோடி வகையறாக்களைத் தோற்கடித்துவிடலாம்